முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவரும் நெல்லை வட்டாரத்து பாடல் கலைஞருமான கரிசல் கிருஷ்ணசாமி இன்று காலமானார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அமைப்புகளின் ஆயிரக்கணக்கான மேடைகளில் மாநிலம் முழுவதும் கரிசல் கலைக்குழுவின் சார்பில் உணர்ச்சிமயமான பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளராகப் பணியாற்றிவந்த இவரின் தனிப் பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும் குறுந்தகடுகளாகவும் வெளிவந்துள்ளன.
தென்மாவட்டங்களின் பெட்டிக் கடைகள், தேநீர்க் கடைகள், அரசியல் நிகழ்ச்சிகளில் கரிசல் கிருஷ்ணசாமியின் பாடல்கள் இன்றும் ஒலித்துவருகின்றன.
இவருடைய பாடல்களில், பாரதியைப் பற்றிய மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டுக் கட்டி இந்த மண்ணுக்குக் கொண்டுவந்தேன், ஊரடங்கும் சாமத்திலே ஆகியவை பிரபலமானவை.
அன்னாரின் மறைவுக்கு கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.