பாம்பன் மீனவர்கள் 14 பேர் கைது - வைகோ கண்டனம்

tamilnadu fishermen
தமிழக மீனவர்கள் (கோப்புப் படம்)
Published on

பாம்பன் பகுதி மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாம்பன் தெற்குவாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் டோனா பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான ஐஎன்டி டிஎன் 10 எம்எம் 3030 என்ற விசைப்படகையும், அதிலிருந்த 14 மீனவர்களையும்,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்குக் கொண்டுசென்றுள்ளனர். கடந்த  பிப்ரவரி 22 ஆம் தேதி, இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து அவர்களுடைய 5 மீன் பிடி படகுகளையும் பறிமுதல் செய்தது.

உடனடியாக இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

”பிரதமர் மோடி பதவி ஏற்ற  2014 ஆம் ஆண்டு முதல் 2024 வரை   பத்து ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை 3,656 பேர். மொத்தம் 611 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, நவம்பர் 22ஆம் தேதி வரை இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக, வெளியுறவுத்துறை இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதல் நடத்துவதையும், கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதையும் மீனவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதையும் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.” என்றும் வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com