புதுச்சேரி முதலமைச்சர் இரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
புதுவை முதலமைச்சர் ரங்கசாமியின் வீடு திலாசுப்பேட்டையில் அமைந்துள்ளது. அங்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் தகவல் மின்னஞ்சலில் வந்தது. அதனால் முதல்வர் அலுவலகம் பரபரப்பானது.
உடனே மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. தேடுதலில் அப்படியொன்றும் அசாதாரணமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் வெறும் புரளிதான் எனத் தெரிந்தது.
முன்னதாக, கடற்கரைச் சாலை, ஈசுவரன் கோயில் வீதியில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கும் மிரட்டல் விடப்பட்டிருந்தது. தகவல் புரளி என்பது உறுதியானது.
சில நாள்களுக்கு முன்னர் புதுவை துணைநிலை ஆளுநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் இப்படி வெடிகுண்டு மிரட்டல் வந்து, அது புரளி எனக் கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் வீட்டுக்கும் மிரட்டல் விடப்பட்டுள்ளதால், இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தி விசாரித்துவருகின்றனர்.