மேற்குவங்கத்தில் பெண் மருத்துவரைக் கொன்றவனுக்கு அம்மாநில நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இதே சமயம், கேரள மாநில மருத்துவ மாணவரை விசம் வைத்துக் கொன்ற கன்னியாகுமரி மாவட்ட இளம்பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் விதிக்கப்பட்ட இந்த தண்டனைகள் நாடு முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜிகர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த இளம் பெண்ணை கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று பாலியல் வன்கொடுமையும் கொலையும் செய்த விவகாரம், நாட்டையே உலுக்கியெடுத்தது. அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். நாடாளுமன்றத்திலும் பேசப்பட்ட இந்த வழக்கில் நேற்று சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு, 57 நாள்களில் விசாரணை முடிக்கப்பட்டது. கடந்த 18ஆம் தேதி இதில் கைதான சஞ்சய் ராய் என்பவனே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. நேற்று அவனுக்கு சாகும்வரை சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், நீதிபதி அனிர்பன் தாஸ். கொல்லப்பட்ட மருத்துவரின் குடும்பத்துக்கு அவரின் வயது கருதியும் அரசுப் பணியை முன்னிட்டும் 17 இலட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த சாரோன்ராஜ், குமரி மாவட்டம் நெய்யூரில் பிஎஸ்சி கதிரியக்கவியல் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். 2021இல் தமிழக எல்லையில் உள்ள பாறசாலையில் வசிக்கும் கிரீஷ்மாவும் இவரும் காதலித்தனர். திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. கிரீஷ்மாவின் முதல் கணவன் இறந்துவிடுவார் என வீட்டார் கூறி, சாரோன்ராஜனை 2022 அக்டோபர் 14 அன்று தங்கள் வீட்டுக்கு வரவழைத்தனர். அவருக்கு மாம்பழக்கூழில் விசத்தைக் கலந்துகொடுத்தனர். அதனால் வாந்தி, உறுப்புகள் செயலிழந்து அடுத்த பத்தாவது நாளில் சாரோன்ராஜ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரின் மரண வாக்குமூலத்தால் கிரீஷ்மா குடும்பத்தினரின் விசக் கொலை அம்பலமானது. கடந்த 17ஆம் தேதி கிரீஷ்மா குற்றவாளி என நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நேற்று கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும் அவளுடைய தாய்மாமனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.