பெண்களைக் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான சட்டத்திருத்த வரைவுகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டுவந்தார்.
அதன் விவரம்:
2023-ம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்தச் சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது.
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள், பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி, மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறைத் தண்டனையும் மரண தண்டனையும் கிடைக்கும்.
கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும்.
மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாத கடுங்காவல் சிறை தண்டனையும் ஆயுள் கால சிறைவாசமும் விதிக்கப்படும்.
காவல்துறை அலுவலர், அரசு பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர், சிறைச் சாலைகள், தடுப்புக் காவல் இல்லம் ஆகியவற்றில் பெண்கள் அல்லது குழந்தைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதிகாரம் மிக்க நபர் அல்லது நெருங்கிய உறவினர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ 20 ஆண்டுகளுக்குக் குறையாத கடுங்காவல் சிறை தண்டனை, ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்தினாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.
பெண்களின் ஆடைகளை அகற்றி தாக்குதலில் ஈடுபடுபவர்கள், மறைந்திருந்து பார்த்து பாலியல் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
பெண்களைப் பின்தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்படும்.
ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளிவர முடியாது.” என்று புதிய சட்டத்திருத்த வரைவில் கூறப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பில் ஒருமனதாக இது நிறைவேற்றப்பட்டது.