முதலமைச்சர் ஸ்டாலினை அப்பா எனக் கூப்பிடச் சொல்வது பெரியாரின் பெயரை மறைப்பதற்காகத்தான் என்று அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கூவம் கூவம்தான்... காவிரி நீர் எங்கே? கூவம் காவிரி ஆகிவிடுமா? செஞ்சிக் கோட்டைக்குப் போனால் தேசிங்கு இராஜா ஆகிவிடுமா? மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிடுமா? அம்மா என்றால் அம்மாதான்! அம்மாவுடன் ஒப்பிடமுடியாது. பசுகூட அம்மானுதான் கூப்பிடும். பசு அப்பானு கூப்பிடுதா? நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது அப்பா பிள்ளையைப் பாராட்டுவது, அப்பாவைப் பிள்ளை பாராட்டுவது, இப்படிதான் மாறிமாறி பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறினார்.
“ ஸ்டாலின் சொல்றாரு என்னை அப்பானு கூப்பிடு... அண்ணானு கூப்பிடு... இது தேவையில்லாத விசயம்... விசயம் என்னன்னா தந்தைனு சொன்னா பெரியார்தான். அண்ணன்னு சொன்னா பேரறிஞர் அண்ணாதான். பெரியார் புகழை மறைக்கணும், அண்ணா புகழை மறைக்கணும் என்பதற்காக இவர்களை அப்பா, அண்ணன்னு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.தமிழ்நாட்டுல சட்டம்ஒழுங்கு கெட்டுப் போச்சு, விலைவாசி உயர்வு... இப்போது அப்பா, அண்ணன்கிறதுதான் நாட்டுக்கு முக்கியமா? அமைச்சர் வேலு தாய்மாமன்னு கூப்பிடுன்னு இன்னொரு கட்டத்துக்குப் போகிறார்... ஸ்டாலினை மச்சான்னு கூப்பிடுவியா?” என்றும் ஜெயக்குமார் பேசினார்.
சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.