சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 13 பேர் இன்று ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் நீக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக பேரவையில் இன்று விவாதிக்க வேண்டுமென அ.தி.மு.க.வினர் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கைகளில் பதாகையும் சட்டைப்பையில் அட்டையையும் வைத்திருந்தனர்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், பேச அனுமதிக்க அவைத்தலைவர் மறுத்துவிட்டார்.
உடனே கையில் பதாகை வைத்திருந்த அவர்கள் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். பதாகையுடன் உள்ளவர்களை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிடுவதாக அவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார். அதையடுத்து அ.தி.மு.க.வினர் தாங்களாகவே அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பதாகை வைத்து அமளிசெய்த 13 உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதாகவும் அப்பாவு அறிவித்தார்.
தொடர்ந்து இரண்டு முறை அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டால், குறிப்பிட்ட உறுப்பினர் அந்தத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்பதால், இந்த உத்தரவைப் பரிசீலனை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட அப்பாவு, இன்று ஒரு நாள் மட்டும் 13 அ.தி.மு.க. உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாகவும் நாளைமுதல் அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.
அவையிலிருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அக்கட்சியின் மூத்த உறுப்பினரான செங்கோட்டையன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். பின்னர் அது முடிந்ததும் அவர் வெளியே வந்தார். மீண்டும் அ.தி.மு.க.வினர் உள்ளே சென்றபோது அவரும் அவைக்குள் சென்றார்.