பேரா. கல்யாணி மீது பொய் வழக்கு- நீதிமன்றம் தீர்ப்பு!

பேரா. கல்யாணி மீது பொய் வழக்கு- நீதிமன்றம் தீர்ப்பு!
Published on

கல்வியுரிமை, மனிதவுரிமைச் செயற்பாட்டாளரான பேராசிரியர் கல்யாணி உட்பட நால்வர் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டில் பழங்குடி இருளர் மோகன் என்பவரை காவல்நிலைய சித்திரவதை செய்த அப்போதைய மயிலம் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது புகார் எழுதித் தந்ததாக பேராசிரியர் பிரபா கல்விமணி, இரா.முருகப்பன், பெரியபையன், மோகன் ஆகியோர் மீது அந்த உதவி ஆய்வாளர் வழக்கு பதிந்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து திண்டிவனம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நடுவர் மாலதி, வழக்கு பொய்யெனக் கூறி 4 பேரையும் விடுவித்தார்.

நால்வர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆ.வெங்கடேசன், இளம்புகழ், பழனிவேல் ஆகியோர் வாதாடினர்.

முன்னதாக, ”காவல் நிலைய சித்திரவதையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மோகனுக்கு நீதி கிடைத்திட புகார் மனு எழுத உதவிய பேராசிரியர் கல்விமணி, எழுத்தாளர் இரா.முருகப்பன் ஆகிய இருவரையும் மூர்க்கத்தனமாகக் கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன், இரு காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு 2019 இல் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த ஆணையத்தின் அப்போதைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் முறையற்ற வகையில் கைது செய்ததைக் கண்டித்து, அத்துமீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், ரூ. 50,000 அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையினை உதவி ஆய்வாளரின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, பிரபா கல்விமணி, முருகப்பன் ஆகிய இருவருக்கும் தலா 25,000 வழங்கும்படி மே 2022 இல் உத்தரவிட்டிருந்தார்.” என்றும் பழங்குடி இருளர் சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com