மதவெறியைத் தூண்டும் ஆளுநர் இரவி- பதவிநீக்க வீரமணி வலியுறுத்தல்!

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி
Published on

உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்த பிறகும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாது ஆர்.எஸ்.எஸ். கொள்கையோடு, மதவெறியோடு செயல்படும் ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

”மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் பேசி முடித்ததும், 'ஜெய் சிறீராம்' என்று மூன்று முறை கூச்சலிட்டதுடன், மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் செயல்படலாமா?

இந்திய அரசமைப்புச் சட்டப்படியான பொறுப்பில் உள்ள ஒருவர், அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கூறான மதச்சார்பின்மைக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்; அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்; ஆற்ற வேண்டிய கடமையைக் காலத்தே ஆற்றத் தவறுகிறார்;  மாணவர்களிடம் மதவெறியைத் தூண்ட முயலும் கடைநிலை இந்துத்துவ வெறியராகவே வலம் வருகிறார். உச்சநீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கிய பிறகும், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ். கொள்கை அடிப்படையிலான தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஆளுநர் என்ற பதவியைப் பயன்படுத்திச் செயல்படுத்திக் கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

மதவெறியைத் தூண்டுவதா?

மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுவதையும், சமூகநீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அனுமதிக்கவே கூடாது. கல்வித் துறைக்கும், இவருக்கும் தொடர்பில்லை என்ற நிலை உச்சநீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்டுவிட்ட பிறகும், இவரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவோர் யார் என மக்கள் அடையாளம் காணவேண்டும்.

இத்தகைய மதவெறியர் ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலையைத் தவிர்க்க முடியாது என்பதை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.” என்று வீரமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com