மதுரை டங்க்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து- மத்திய அரசு அறிவிப்பு!

tungsten protest
டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மதுரை தமுக்கம் பகுதியில் மக்கள் போராட்டம்
Published on

மதுரை அருகே மேலூர் சுற்று வட்டாரத்தில் அரிட்டாபட்டி, நாயக்கபட்டி உட்பட்ட கிராமங்களில் கொண்டுவரப்பட இருந்த டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பாறைகள் நிறைந்த பகுதியாகவும் செழிப்பான விவசாயப் பகுதியாகவும் இருந்துவரும் அரிட்டாபட்டி வட்டாரத்தில், டங்க்ஸ்டன் கனிமம் வெட்டி எடுப்பதற்கு கடந்த ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் அதைச் செயல்படுத்துவதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கின. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இடதுசாரி கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து இத்திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் தராது என அமைச்சர்கள் கூறியதுடன், சட்டப்பேரவையிலும் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு குழு, மத்திய கனிம வளத் துறை அமைச்சரைச் சந்தித்தனர். பின்னர் வெளியே வந்த அவர், திட்டத்தை ரத்துசெய்வதாக உறுதியளிக்கப்பட்டது என்று கூறினார். 

ஆனால் போராட்டம் நடத்திவந்த மக்கள் முறைப்படி அறிவிப்பு வந்தால்தான் ஆயிற்று என தாங்கலுடன் வாங்கி வைத்த இனிப்புகளை அப்படியே வைத்தனர். 

இந்நிலையில் இன்று மாலையில் மத்திய அரசு அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com