மனுக்களைக்கூட வாங்கமுடியாதது சமூகநீதியா?- அன்புமணி

Anbumani- Stalin
அன்புமணி - ஸ்டாலின்
Published on

இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகள் குடும்பத்தினர் பிணைக் கைதிகளாக நடத்தப்பட்டனர் என்றும், இட ஒதுக்கீடு கோரும் மனுவைக்கூட அளிக்கவிடாமல் பறித்துக் கொண்டது அரசு; இதுதான் தி.மு.க. அரசின் சமூகநீதி காக்கும் லட்சணம் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”விழுப்புரம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயித்தியாகம் செய்த ஈகியர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிபடையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அது மட்டுமின்றி, அதில் பங்கேற்ற ஈகியர்களின் குடும்பத்தினர் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவைக்கூட முதலமைச்சரிடம் அளிக்க விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.  திமுக அரசின் இந்த சமூக அநீதி நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 ஈகியர்களுக்கு விழுப்புரம் வழுதரெட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் திறப்பு விழா இன்று காலை நடத்தப்பட்ட நிலையில், அதில் பங்கேற்பதற்காக நேற்று மதியமே அழைத்துச் செல்லப்பட்ட  21 ஈகியர்களின் குடும்பத்தினர், கிட்டத்தட்ட பிணைக்கைதிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர்.  நேற்று பிற்பகலில் மணிமண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு  மணிமண்டப திறப்பு விழாவின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து  மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்ற அதிகாரியால் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது ஊடகங்களுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் தங்களின் நோக்கம் என்றும், அதற்கான கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும் என்று தியாகிகளின் குடும்பத்தினர் கேட்ட போது, அது போன்று எந்த மனுவையும் முதலமைச்சரிடம் தரக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி, இன்று காலை  முதலமைச்சரிடம் வழங்குவதற்காக  ஈகியர் குடும்பத்தினர் மனுக்களை எடுத்துச் சென்ற போது, அவை அனைத்தையும் விழா நடைபெறும் இடத்தில் இருந்த மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையிலான குழுவினர் பறித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஈகியர்களின் மணிமண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஈகியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து முறையிட்ட போது, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முதலமைச்சர் சென்று விட்டதாகவும் ஈகியர் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்த மனுக்களைக் கூட பெற முடியாத அளவுக்கும், அவர்களின் கோரிக்கைகளை  முதலமைச்சர் காதுகொடுத்து கேட்கமுடியாத அளவுக்கும் தி.மு.க. அரசு பாசிசத் தன்மை கொண்டதாக மாறிவருகிறது.

தியாகிகள் மணிமண்டபத் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ளப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை  அந்த விழாவில் வெளியிட வேண்டும் என்று  பா.ம.க. நிறுவனர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், அந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடவில்லை என்பது மட்டுமின்றி, அதுகுறித்த மனுக்களைக்கூட முதலமைச்சரிடம் வழங்க விடாமல் தடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த அரசு வன்னியர்கள் மீது எத்தகைய வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்பது அம்பலமாகியிருக்கிறது.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com