மருத்துவப் படிப்பில் மாநில ஒதுக்கீட்டை நிறுத்துவதா? - கி.வீரமணி கண்டனம்

தி.க. தலைவர் கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி
Published on

முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநில அரசுக்கென இட ஒதுக்கீடு கிடையாதா?

சமூகநீதியின்மீது மரண அடி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

”எம்.பி.பி.எஸ். தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென இடங்களை வைத்துக் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு, அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த சமூகநீதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கும், மாநில உரிமைக்கும் மரண அடியாக அமையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாதாம்! இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாதிப்பாகும்.

தனது சொந்த செலவில், மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மாநில அரசு செயல்பட்டால், அதில் அத்துமீறி நுழைந்து, அனைத்து மாநிலங்களுக்கும் ‘தானம்’ செய்யும் அதிகாரம் என்பது அரசமைப்புச் சட்டப்படி சரியானதா?

ஏற்கெனவே மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காட்டைக் கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசு, மாநில அளவிலான 50 விழுக்காட்டையும் பறிப்பது பகற்கொள்ளையாகும்.

இதனைத் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு அரசும் பணியாது; இதன்மீது சட்ட ரீதியான மேல்நடவடிக்கையை நீதிமன்றத்தின்மூலமும், மக்கள் மன்றத்தின்மூலமும் மேற்கொள்ளவேண்டும்.” என்று கி.வீரமணி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com