பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் சென்னைக்கு வந்து மீண்டும் நேற்று தைலாபுரத்துக்குத் திரும்பினார். கடந்த சில நாள்களாக நேரலை ஊடகங்களுக்கு பரபரப்பான தீனியைக் கொடுக்கும்வகையில் ஆங்காங்கே சில வாசகங்களைப் பேசிவிட்டு நகர்ந்தார்.
அவருடைய இயல்புக்கு மீறியவகையில் ஊடகத்தினரிடம் நேரம் கொடுத்து பொறுமையாகப் பேசிய அவர், எந்தக் கேள்வியையும் தவிர்க்காமல் ஏதோ ஒரு பதிலைத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
எல்லாம் நல்லபடியாக முடியும் என அவர் கூறியதை வைத்து, அன்புமணியின் ஆதரவாளர்களும் கொண்டாட்டம் அடைந்தனர்.
ஆனால், இன்று பா.ம.க.வின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டுவரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞரும் அக்கட்சியின் சமூக நீதிப் பேரவையின் தலைவருமான கே.பாலுவையே அப்பதவியிலிருந்து நீக்கி இராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அன்புமணிக்கும் இராமதாசுக்கும் இடையில் முரண் வெடித்தநிலையில், பாலு அன்புமணியின் பக்கமாகவே நின்றுவருகிறார். அவருடன் பலரும் அன்புமணியின் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டுள்ள நிலையில், பாலுவின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.