தமிழகத்தில் மேலும் 17 மரகதப் பூஞ்சோலைகள் எனப்படும் கிராம பசுமைக் காடுகள் உருவாக்கப்படவுள்ளன.
நூறு மரகதப் பூஞ்சோலைகள் (கிராம மரப் பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022-23-ம் ஆண்டில் சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம் கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களைச் சார்ந்து இருப்பதை குறைப்பதே. உள்ளூர் மக்களை இதில் ஈடுபடுத்துவதன் மூலம் மாநிலத்தின் பசுமைப் பரப்பை மேம்படுத்துவதும் அவர்களுக்கான மாற்று வருவாய் ஏற்படுத்துவதும் ஆகும்.
ஒவ்வொரு மரகதப்பூஞ்சோலையும், 1 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கம் செய்யப்பட்டு அதில் பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடிமரம், எரிபொருள், தீவனம், காய்/கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை அனைத்து மரகதப்பூஞ்சோலைகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, 24.08.2022 தேதியில் ரூ.25 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வெளியிடப்பட்டது. தமிழக அரசினால் ஏற்கெனவே 83 மரகதப் பூஞ்சோலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட்டில் 29 மாவட்டங்களில் 75 பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டு, திறந்துவைக்கப்பட்டன. மேலும் 8 மரகதப் பூஞ்சோலைகளிலும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், மேலும் 17 மரகதப் பூஞ்சோலைகள் 5 மாவட்டங்களில் ரூ.425 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டம் (5), பெரம்பலூர் (4), கள்ளக்குறிச்சி (3), திருப்பத்தூர் (3), திருவண்ணாமலை (2) என கிராமப் பசுங்காடுகள் உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.