இந்தியாவின் செல்போன் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் அளவைத் தாண்டிவிட்டது என மத்திய அரசின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் முதலிடத்தில் உள்ளது. மொத்த ஏற்றுமதியில் ஐபோனின் பங்கு மட்டும் 1.5 இலட்சம் கோடி ரூபாய் ஆகும்.
முந்தைய ஆண்டைவிட இந்த ஏற்றுமதி 54 சதவீதம் அளவுக்கு கூடியுள்ளது என்பது கூடுதல் தகவல்.
ஒன்றிய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் நேற்று தில்லியில் இத்தகவலைத் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தியாவின் மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் திறன்பேசிகள் முன்னணியில் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தைத் தவிர, சாம்சங், மோட்டரோலா ஆகிய நிறுவனங்களும் செல்போன் ஏற்றுமதியைச் செய்துவருகின்றன. சீனத்தின் விவோ, ஓப்போ, சியோமி ஆகிய நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் செல்வாக்காக இருந்தபோதும், ஏற்றுமதியில் அவை இன்னும் முன்னிலைக்கு வரவேண்டிய நிலையில்தான் உள்ளன.
நாட்டில் சிறிதும் பெரிதுமாக 400 மின்னணுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன என்றும் அவர் கூறினார்.
ஆண்டுக்கு 10 முதல் 1000 கோடி ரூபாய்வரை விற்றுமுதல் செய்யும் நிறுவனங்களுக்கு 1 முதல் 10 சதவீதம்வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.