ரூ.71 இலட்சம்... 26 வயது குஜராத் இளைஞர் சைபர் மோசடி செய்து பிடிபட்டது எப்படி?

ரூ.71 இலட்சம்... 26 வயது குஜராத் இளைஞர் சைபர் மோசடி செய்து பிடிபட்டது எப்படி?
Published on

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இணையவழிக் கைது எனக் கூறி குஜராத் இளைஞர்கள் இருவர் 71 இலட்சம் ரூபாயைப் பறித்து மோசடி செய்துவிட்டனர். 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவருக்கு கடந்த டிசம்பர் 13 ஆம் தேதியன்று காலை 10.06 மணிக்கு வாட்சாப்பில் ஒருவர் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் திருவள்ளூர் நபர் டிஜிட்டல் அதாவது இணையக் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, இதிலிருந்து மீளவேண்டும் என்றால் தாங்கள் சொல்லும் ஒரு வங்கிக்கணக்கில் 71 இலட்சம் ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

அதை அப்படியே நம்பிய திருவள்ளூர் நபரும் அவர்கள் சொன்னபடி பணத்தைச் செலுத்தியுள்ளார். மீண்டும் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களைப் பிடிக்கவே முடியவில்லை. பிறகுதான்,தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அவர் உணர்ந்திருக்கிறார். 

தேசிய சைபர் குற்றவியல் தடுப்பு இணையதளத்தில் புகார் அளித்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அப்போது குற்றவாளிகள் குஜராத்தில் இருப்பதை அறிந்ததும், குஜராத்துக்கே நேரடியாகச் சென்று அவர்களைக் கைதுசெய்தனர். 

சூரத் நகரத்தைச் சேர்ந்த முதன்மைக் குற்றவாளி சோஜித்ரா ஹிரன், புனகம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் 26 வயதுதான் ஆகிறது என்பதும் தெரியவந்தது. 

இவருக்கு உதவியாகச் செயல்பட்ட கோல்வாட் கம்ரேஜ் பகுதியைச் சேர்ந்த ரோகாட் மீட்குமாருக்கு வயது 30 என்பதும் தெரிந்தது. 

இருவரும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் சொன்ன குறிப்பிட்ட வங்கிக் கணக்கு, வேறு 9 வழக்குகளிலும் தொடர்பு உடையது என்பதையும் திருவள்ளூர் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

அந்தக் கணக்கில் இருந்த 5.66 இலட்சம் ரூபாய் முடக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவரின் தொகையைத் திரும்பப்பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com