வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் பெண்ணிடம், அரியலூர் மாவட்ட சிறப்பு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெண் ஒருவர் இழிவாகப் பேசியது சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது. இதையடுத்து அந்த பெண் போலீசை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் சுமதி. அந்தக் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் ஒருவர், அரசு வேலை என சொல்லி காவல்நிலையத்துக்கு இன்றைக்கு வரலாமா எனக் கேட்டுள்ளார்.
அதற்கு சுமதி, ” ஒங்களுக்கெல்லாம் திமிர் எடுத்து ஆடுறீங்க... நீங்க வந்தா என்ன வராட்டி என்ன... ஒங்க வேலை மசிரப் பாருங்க.. வைம்மா போன...” என்று மிகவும் மோசமாக பதில் அளித்துள்ளார்.
அவரின் இந்தப் பேச்சால் அதிர்ச்சிக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண், மேலும் சிக்கலுக்கு ஆட்பட்டார்.
அவர்களிடையே நடைபெற்ற இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் கசிந்து மளமளவெனப் பரவியது.
மாநிலம் முழுவதும் இந்த ஒலிப்பதிவு பரவியதால், திருச்சி மண்டல சரக காவல்துறைத் துணை இயக்குநர் வருண், இதில் நேரடியாகத் தலையிட்டு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அவரே காவல்துறை மைக்கில் அந்தக் காவல்நிலையத்துக்கு அழைத்துப் பேசியபோது, அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அங்கு இல்லை. அவர் உணவுக்குப் போயிருப்பதாக காவலர் ஒருவர் கூறினார். சில நிமிடங்களில் ஆய்வாளர் வந்து பதிலளிக்கையில், மோசமாக நடந்துகொண்ட சுமதியை நியாயப்படுத்துவதைப் போல வருணிடம் பதில்கூற, அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
அந்த ஆய்வாளரையும் கடுமையாகச் சாடியவர், அனைத்து மகளிர் காவல்நிலையம் தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றி அவருக்கு எடுத்துரைத்ததுடன், சுமதியை உடனடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றவும் உத்தரவிட்டார்.