வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இறந்துபோனதால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
கடந்த 21ஆம் தேதியன்று இத்தொகுதியின் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலம் குன்றி உயிரிழந்தார். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இறந்துபோனார்.
அவர் இறந்தநிலையில் அவரின் பொறுப்பை நிறைவேற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடைத்தேர்தலைத் தவிர வேறு ஏற்பாடு இல்லை.
ஒருவேளை ஆறு மாத இடைவெளி மட்டும் இருந்தால் இடைத்தேர்தலை நடத்தாமல் 234 தொகுதிகளுக்கும் ஒருசேர தேர்தலை நடத்துவார்கள்.
வழக்கத்தின்படி தமிழ்நாட்டு முழுமைக்கும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும். ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு திடீரெனக் கொண்டுவந்தால் இதில் மாற்றம் இருக்கும்.
உடனடியாக அந்தத் திட்டம் வராது எனக் கூறினாலும், மத்திய அரசைப் பொறுத்தவரை எல்லாமே சஸ்பென்சாகத்தான் கடைசி நேரம்வரை இருந்துவருகிறது.
இந்த நிலையில், வால்பாறை தொகுதிக்குத் தேர்தல் நடத்த அதை முதலில் காலியாக இருப்பதாக முறைப்படி அறிவிக்க வேண்டும். அதையடுத்துதான் தேர்தல் நடைமுறைகள் தொடங்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.