அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் அண்ணா மன்னிப்பு கேட்டதாக அண்ணாமலை கூறியதைப் பற்றி தி இந்து ஏடு விளக்கம் அளித்துள்ளது.
அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடந்த வாரம் முழுவதும் சூடான வாத- பிரதிவாதங்கள் நடைபெற்று, உரசல் போக்கு உச்சத்துக்குப் போனது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வின் அமைப்புச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லை என கட்சியின் கருத்தாகத் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு நேர்மாறாக நேற்று அ.தி.மு.க. தலைமை எனும் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பா.ஜ.க. கூட்டணி பற்றி நிர்வாகிகள் கருத்துதெரிவிக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இன்று கோவையில் ஊடகத்தினரிடம் பேசிய அண்ணாமலை, இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை என அதிர்ச்சி கொடுத்தார்.
நேற்றுவரை பிரச்னைக்கு அடித்தளமிட்ட அண்ணாமலை இப்படிப் பேசியது, செய்தியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
கூட்டணியை முறிக்கும் அளவுக்குப் பேசிவிட்டார் என்பதுதான் அண்ணாமலையின் மீதான விமர்சனமே!ஆனால், அப்படியா என வாயைப் பிளக்கும்படியாக அவர் இன்று பேசியுள்ளார்.
மேலும், கூட்டணி உரசலில் முக்கியமாக இடம்பெற்றது, அண்ணாவைப் பற்றி அண்ணாமலை கூறிய தகவல்தான். 1956ஆம்ஆண்டில் மதுரையில் தான் பேசிய பேச்சுக்காக அண்ணா மன்னிப்பு கேட்டார் என்று சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அ.மலை கூறியது, அ.தி.மு.க. தரப்பில் கடும் கோபத்தை உசுப்பிவிட்டது. அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக்கொண்டு, அவர் மீதான ஒரு குற்றச்சாட்டை ஏற்கமுடியுமா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, வேலுமணி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டணி முறிவு எனும் இடத்துக்கு இட்டுச்சென்ற இந்த விவகாரத்தில், தி இண்டு ஆங்கில நாளேட்டுச் செய்தியில் அண்ணாவின் மன்னிப்பு இடம்பெற்றதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி ஒரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என இன்று தி இந்து ஏட்டில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “ 1956ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன் விழா நடைபெற்றதையொட்டி மே 31ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதிவரை, தி இந்துவில் செய்திகள் வெளியிடப்பட்டன. நான்காவது நாள் அதாவது ஜூன் 2ஆம் தேதி பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவின் பேச்சுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். பொன்விழா ஏற்பாட்டாளர்களைக் கடிந்துகொண்ட அவர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குரிய இடத்தில் இறைமறுப்பாளர்களின் பேச்சுகளை அனுமதிப்பதா எனக் கேட்டதாக மட்டும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா என்ன பேசினார் என்றோ அவர் மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவித்தார் என்றோ குறிப்பிடவே இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவையில் இன்று அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேட்டதற்கு, தி இந்து எதுவும் சொல்லட்டும்; அண்ணா மன்னிப்பு கேட்டார் என்ற தன்னுடைய நிலையில் மாற்றம் இல்லை என திட்டவட்டமாகக் கூறினார்.