(வலமிருந்து) மணி, சவுமியா, அசோகன்
(வலமிருந்து) மணி, சவுமியா, அசோகன்

தர்மபுரி: பளிச்சிடுகிறார் சவுமியா அன்புமணி!

15 லட்சத்து 12 ஆயிரத்து 732 வாக்காளர்கள் கொண்ட தொகுதி தர்மபுரி. பாலக்கோடு - கே.அன்பழகன் (அதிமுக), பென்னாகரம் -ஜி.கே.மணி (பாமக), தருமபுரி - எஸ்.பி.செங்கோட்டையன் (பா.ம.க), பாப்பிரெட்டிப்பட்டி- கோவிந்தசாமி (அதிமுக), அரூர் (தனி) -சம்பத்குமார் (அ.தி.மு.க), மேட்டூர் -சதாசிவம் (பா.ம.க) இப்படி ஆறு சட்டமன்றங்களுக்கு எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கிறது இந்த மக்களவை...

இத்தொகுதியில் 4 முறை பா.ம.க, 3 முறை திமுக, 2 முறை அதிமுக, ஒரு முறை தமாக, 2 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. 2019 தேர்தலில் திமுக செந்தில் குமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று தன்னை அடுத்து வந்த பா.ம.க அன்புமணியை தோற்றுகடித்தார். அன்புமணி பெற்ற வாக்குகள் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235. ஓட்டுகள் வித்தியாசம் 70 ஆயிரத்து 753. அ.ம.மு.க பெ. பழனியப்பன் 53 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றுள்ளார். 2014 தேர்தலில் பா.ம.க அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.

தொகுதியில் இந்த முறை பாஜக கூட்டணியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் என்பவர் முதலில் அறிவிக்கப்பட்டார்.

பின்பு திடீரென்று அதிரடியாக அன்புமணியின் மனைவி சவுமியா வேட்பாளராக்கப்பட்டார். திமுகவில் சிட்டிங் எம்.பி செந்தில்குமாருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஏ.மணி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் அசோகன், நாம் தமிழரில் அபிநயா போட்டியிடுகின்றனர்.

சவுமியா ஏற்கனவே பசுமைத் தாயகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அப்பா காங்கிரஸ்காரர். எனவே அந்த அரசியல் வாடை நன்றாகவே சவுமியாவிற்குள் ஏறியிருக்கிறது. தான் தொகுதியில் வீதிவீதியாக ஓயாமல் பிரச்சாரம் செய்கிறார். கூடவே அவர் மகள்களும் ஓட்டுக் கேட்க வீடு வீடாக களம் கண்டுள்ளனர்.

நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா
நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா

போதாக்குறைக்கு கணவர் அன்புமணி ராமதாஸ் நினைத்த நேரத்தில் நினைத்த ஊரில் கண்ணில் கண்ட ஒரு கூரை வீட்டில் போய் உட்கார்ந்து கொள்கிறார். அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்து நலம் விசாரிக்கிறார். இதன் மூலம் கூட்டமும் சேருகிறது. பிரச்சாரமும் நடக்கிறது. ஓட்டுகளும் சேருகிறது. அதுபோக சவுமியாவின் மாமனார் ராமதாஸூம் மருமகளுக்காக இங்கே சில நாட்கள் கேம்ப் அடித்து பிரச்சாரம் செய்துள்ளார்.

சவுமியாவின், அவர் குடும்பத்தின் பிரச்சாரம் தொகுதி மக்களையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. திரும்பின பக்கமெல்லாம் பாமக கொடி பறக்கிறது. கூட்டணித்தலைமையான பாஜகவை தொகுதிக்குள் தேடத்தான் வேண்டியிருக்கிறது.

திமுக வேட்பாளர் மணி வழக்குரைஞர். போன எம்.பி. தேர்தலுக்கே சீட் கேட்டார். கிடைக்கவில்லை. இடைத்தேர்தல் சட்டசபைக்கு 2019 இல் வந்தது. அதில் சீட் கொடுத்தார்கள். ஆனால் தோற்றுவிட்டார். மந்திரிகள் எ.வ.வேலு, பன்னீர் செல்வம் ரெக்கமண்டேஷனில் இப்போது சீட் கிடைத்திருக்கிறது. பிரச்சாரம் ஓடி ஓடி நடக்கிறது. ஒரு வேளை சவுமியாவுக்குப் பதில் அரசாங்கம் என்பவரே வேட்பாளராக பாமகவில் இருந்திருந்தால் தூங்கிக் கொண்டே ஜெயித்திருப்பார் மணி.

அதற்கு இடம் கொடுக்காமல் இவரை ஓயாமல் பிரச்சாரம் செய்ய வைத்து ட்ரில் வாங்கிக் கொண்டிருக்கிறார் எதிர் வேட்பாளர் சவுமியா.

அதிமுக வேட்பாளர் அசோகன். தர்மபரி அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவியின் மகன். கூட்டணி பலம் திமுகவிற்கு, இரட்டை இலை சின்னம் பலம் அதிமுகவிற்கு. ஜாதி பலம்,செல்வாக்கு பலம் பாமக சவுமியாவிற்கு. இவர்களில் யார் முந்துவார்கள் என்பது கணிக்க முடியாத விஷயமாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com