(வலமிருந்து) பிரகாஷ், ஆற்றல் அசோக்குமார், விஜயகுமார்
(வலமிருந்து) பிரகாஷ், ஆற்றல் அசோக்குமார், விஜயகுமார்

ஈரோடு: ஆற்றலைக் காட்டும் அதிமுக!

தேர்தலுக்குத் தேர்தல், ‘இந்தக் கட்சிதான் ஜெயிக்கும்; எவ்வளவு பந்தயம்?’ என்று எளிய மக்கள் பேசிக்கொள்வது இயல்பாக நடக்கும். இன்ன வேட்பாளர்தான் ஜெயிப்பார் என்று பந்தயம் கட்டுவது என்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

ஈரோடு தொகுதியைப் பொறுத்தவரை இரண்டாவது ரகமான ஆட்கள் இந்தத் தேர்தலில் நிறைந்திருக்கிறார்கள். ‘ஆற்றல் அசோக்குமார்தான் ஜெயிப்பார். என்ன பந்தயம்?’ என்று கேட்பவர்களை நிறையவே காண முடிகிறது. யார் இந்த ஆற்றல் அசோக்குமார். அவருக்கு அப்படியென்ன செல்வாக்கு?

தமிழகத்திலேயே அதிகமான சொத்துப்பட்டியலை வேட்பாளர் கணக்கில் காட்டி (ரூ. 657.47 கோடி) அசத்தியவர். அன்னதானம் முதற்கொண்டு, கல்வி உதவிகள் வரை ஏழை, எளியவர்களுக்குப் பாரபட்சமின்றி அளித்து வருபவர். பலமான கட்சியான அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறவர். பந்தயம் கட்ட இதற்கு மேல் என்ன தகுதி வேண்டும்? அப்படி உண்மையிலேயே ஆற்றல் அசோக்குமார் ஜெயிப்பாரா? அவருக்கு எத்தனையோ ஆற்றல்கள் இருக்கலாம். ஓட்டு வாங்கும் ஆற்றல் இருக்கிறதா?’

திருச்செங்கோடு என்று பெயர் பெற்றிருந்த ஈரோடு நகரை உள்ளடக்கிய இந்தத் தொகுதி ஈரோடு என்ற பெயரையே பெற்றது 2009 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில்தான். மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், தாராபுரம்(தனி), காங்கேயம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் முறையே மூன்று திமுக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.கவில் தலா ஒரு எம்.எல்.ஏக்கள் என வலம் வருகின்றனர்.

ஆக, திமுக கூட்டணியில் நான்கு எம்.எல்.ஏக்கள். அவர்களும் பெரிய தலைகள். காங்கிரஸில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (ஈரோடு கிழக்கு). திமுகவில் முத்துசாமி (ஈரோடு மேற்கு) , .மு.பெ.சாமிநாதன் (காங்கேயம்), கால்விழி (தாராபுரம்). இந்த மூவருமே அமைச்சர்களும் ஆவர். அ.தி.மு.கவிலும் சளைத்தவர் அல்ல. முன்னாள் அமைச்சர் தங்கமணி (குமாரபாளையம்). எஞ்சியிருக்கும் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி. சாட்சாத் தற்போது அதிமுகவில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமாரின் சொந்த மாமியார்.

அசோக்குமாரும் சமீபகாலம் வரை பா.ஜ.கவில்தான் இருந்தார். ஆனால் தேர்தல் சமயத்தை ஒட்டி அதிமுகவில் சேர்ந்துகொண்டார். எடப்பாடி பழனிசாமி. ‘நீ நம்மகிட்ட வாய்யா; உன்னோட அடையாளத்தையே மேலே மேலே கொண்டு போய்க் காட்டறேன்!’ என்று அவர் சொல்லும் அளவுக்கு, இவரிடம் வைட்டமின் ‘ப’ இருந்ததுதான். அந்த அளவுக்கு சென்ற தேர்தலில் இந்த ‘வைட்டமின் ப’வை வாரியிரைத்துத்தான் இவர் மாமியார் மொடக்குறிச்சியில் ஜெயித்தார்.

அந்த வாரியிறைப்பு தி.மு.க கட்சிக்குள்ளும் வேலை செய்தது. அதனால்தான் தி.மு.க ஆட்சியில் சபாநாயகர் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இவரிடம் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதே நிலைதான் இப்போதும் வருமா? கள நிலவரம் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறது.

சென்ற மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க கணேசமூர்த்தி தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றார். அவர் பெற்ற வாக்குகள் 5 லட்சத்து 63 ஆயிரத்து 591. இவரை எதிர்த்த அ.தி.மு.க மணிமாறன் பெற்றது 3 லட்சத்து 52 ஆயிரத்து 973. மக்கள் நீதிமய்யம் சரவணக்குமார் 47 ஆயிரத்து 719 வாக்குகளும், பெற்றிருந்தனர். வெற்றி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 618. ம.தி.மு.கவிற்கு திமுக கூட்டணியில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.

அதையும் வை.கோ மகனே திருச்சிக்கு எடுத்துக் கொண்டார். சிட்டிங் எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார். எடுத்த எடுப்பில் அவர் தற்கொலைக்கு காரணம் சீட் கிடைக்காததே எனப் பேசப்பட்டது. பின்னர் அவர் குடும்பத்து விவகாரம் என்று கதை மாறியது. எனவே அது குறித்த பேச்சே தொகுதியில் இல்லை.

தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் பிரகாஷ். சொந்த ஊர் காணியம்பாளையம் என்கிற குக்கிராமம். திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர். குடும்பமே தி.மு.க. அப்பா கே.எஸ். ஈசுவரமூர்த்தி 1977 முதலே கிராமத்தில் தி.மு.க கிளைச்செயலாளர். மனைவி கோகிலா மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக 2011 இல் இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் நேரடி சிபாரிசில் இவருக்கு கிடைத்திருக்கிறது சீட்.

மருத்துவர் கார்மேகம்
மருத்துவர் கார்மேகம்

அதனால் தொகுதியில் முக்கிய அமைச்சரான முத்துசாமி குறிப்பிட்டவருக்கு சீட் கிடைக்காத வருத்தம் அவர் ஆதரவாளர் மத்தியில் இருக்கிறது. அதையும், ஆற்றல் அசோக்குமாருக்கு உள்ள செல்வாக்கும் தெரிந்து கொண்ட மேலிடம் அமைச்சரிடம் பேசியிருக்கிறது. பிரகாஷின் வெற்றி உங்கள் கையில் என்றும் எச்சரித்திருக்கிறது. எனவே கட்சிக்காக மூச்சைப் பிடித்துக் கொண்டு வேட்பாளரை அழைத்துக் கொண்டு பிரச்சாரத்தில் அலைகிறார் அமைச்சர் முத்துசாமி.

ஆனாலும் ஆற்றல் அசோக்குமார் மின்னல் வேகம் காட்டுவதுபோல் தெரிகிறது. இதற்கு இன்னொரு காரணம் இங்கே பாஜக கூட்டணியில் களம் இறக்கப்பட்டுள்ள த.மா.கா விஜயக்குமார். வாசனுக்கு இங்கே கட்சி இருக்கிறதா? அது வாசன் பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.

அதன் விளைவு கொங்கு மண்டலத்தொகுதிகளில் அ.தி.மு.கவின் வாக்குகளை சரிபாதியாகப் பிரித்துச் செல்லும் பாஜகவின் வீரியம் இங்கே கடுகளவும் இல்லை. எனவே அது அத்தனையும் அ.தி.மு.கவாகவே நிலைத்து நிற்கிறது. நாம் தமிழர் கட்சியில் சென்ற தேர்தலில் மா.கி. சீதாலட்சுமி என்பவர் 39 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்றிருந்தார். இப்போது அக்கட்சியில் டாக்டர் கார்மேகன் போட்டியிடுகிறார். அவர் நிச்சயம் ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் வாக்குகளை பிரிப்பார்.

இந்த வாக்குகளே ஆற்றல் அசோக்குமாருக்கும், பிரகாஷிற்கும் யார் ஒட்டுவாங்கி ஜெயிப்பார்கள் என்பதை நிர்ணயிக்கப் போகிறது என தொகுதியில் உள்ளவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்போதைக்கு ஆற்றல் அசோக்குமாரே பளிச்சிடுகிறார் என சொல்லலாம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com