(வலமிருந்து) மாதேஸ்வரன், தமிழ்மணி, கே.பி. ராமலிங்கம்
(வலமிருந்து) மாதேஸ்வரன், தமிழ்மணி, கே.பி. ராமலிங்கம்

ஆச்சர்யமூட்டும் நாமக்கல்!

வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுமே பல சர்ச்சைக்குரிய காணொளிக் காட்சிகள் அரசியல் தளத்தில் வலம்வந்த புயலைக் கிளப்பிய தொகுதி நாமக்கல். என்ன பிரச்னை வந்தபோதிலும் ஒர் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் கட்டுடையாமல் இணைந்து நிற்கும் தொகுதியாக மாறி ஆச்சர்யம் தருகிறது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் இப்படி கட்சி ரீதியாக பிரிந்து இருந்தாலும் நாமக்கல் பொறுத்தவரை கொ.ம.தே.க வேட்பாளர் திமுக கூட்டணியில் நிற்பதால் அவர் சமூகத்தினரின் அத்தனை ஓட்டுகளும் அவருக்கே, அவரே வெற்றி பெறுவார் என்பதுதான் தொகுதி முழுக்கப் பேச்சாக இருக்கிறது.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் சங்ககிரி, ராசிபுரம் (தனி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக மூன்று, அதிமுக இரண்டு, கொ.ம.தே.க ஒன்று என்ற எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இங்கு உள்ளார்கள். சிட்டிங் எம்.பி ஏ.கே.பி. சின்ராஜ். அவர் கொ.ம.தே.க. சென்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர். இவரை எதிர்த்தவர் அ.தி.மு.கவில் காளியப்பன். முன்னவர் 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகளும், பின்னவர் 3 லட்சத்து 61 ஆயிரத்து 142 வாக்குகளும் பெற்றார். வெற்றி வித்தியாசம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 97 வாக்குகள். 3ஆவது இடம், நாம் தமிழர் கட்சியின் பாஸ்கர் என்பர் 38 ஆயிரத்து 531 வாக்குகள்.

தொகுதியில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் 40 சதவீதம் முழுமையாக உள்ளார்கள். அடுத்த நிலையில் அருந்ததியர். 28 சதவீதம் வாக்குகள். அடுத்தது செங்குந்தர், உடையார், செட்டியார் இப்படி பலதரப்பட்ட சமூகத்தவர்கள் உள்ளனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அபரிமித வாக்குகள் வித்தியாசத்தில் கொ.ம.தே.க சின்ராஜ் வெற்றி பெற்றும் பயனில்லை. இங்கே பெரிதாக எம்.பி செயலாற்றவில்லை. பெருமளவில் நடக்கும் கோழிப் பண்ணைகள், முட்டை உற்பத்தி, லாரி, கனரக சரக்கு வாகனப் போக்குவரத்து, ரிக் போர்வெல் மெஷின்கள் தொழிலுக்கு மத்திய அரசிடம் பேசி பெரிய வசதிகள், நிதி உதவிகள் பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள்.

எனவே இந்த முறை நான் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டார் சின்ராஜ். கடைசியில் சூரியமூர்த்தி என்பவர் அறிவிக்கப்பட்டார்.

அவர் அறிவிக்கப்பட்ட சூட்டில் பட்டியலின மக்களைப் பற்றி அவதூறாக பொதுமேடையில் அவர் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களை ஊடுருவின. இதனால் கொ.ம.தே.க கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, தி.மு.க தலைமையும் கைகளைப் பிசைந்தது. கொ.ம.தே.க ஈசுவரனைக் கூப்பிட்டுப் பேசி வேட்பாளரை மாற்றப்பணித்தது. அவரும் நிர்வாகிகள் கூட்டம் போட்டு மாதேஸ்வரன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

மாதேஸ்வரன் பற்றியும் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனாலும் நமக்கு வேட்பாளர் மாற்றப்பட்டதே மிகப்பெரிய வெற்றி என்று உள்ளூர் திமுகவினர் கொண்டாடி மாற்று சமூகத்தவரை ஆறுதல்படுத்தி வருகின்றனர்.

நாமக்கல் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி
நாமக்கல் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி

அ.தி.மு.கவில் வேட்பாளராக எஸ். தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பகுதிக்காரர். கட்சியின் மாவட்டச் செயலாளர். இவரும் கவுண்டர்தான்.ஆனால் கொ.ம.தே.கவிற்கு உள்ள சமூக அடையாளம் இவருக்கு கிட்டுவதில் கஷ்டம் இருக்கிறது.

அதை விட முக்கியம் அடுத்து வரக்கூடிய வேட்பாளரின் செல்வாக்கு. அவர்தான் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம். 1980, 1984 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு நாமக்கல் எம்.எல்.ஏவாக விளங்கியவர். 1996 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பியானவர். 2001 சட்டசபைத் தேர்தலில் ராசிபுரத்தில் தோல்வி. 2010- 2016-இல் திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.

இப்படியானவர் கட்சி மாறி மாறி தற்போது பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவராக வீற்றிருக்கிறார். இவர் தி.மு.க, அ.தி.மு.க அதிருப்தியாளர்களை கண்டுபிடிப்பதில் அசகாய சூரர். எனவேதான் மாற்றுக்கட்சியிலிருந்து வரும் விஐபிக்களை கட்சியில் சேர்க்கும் பொறுப்பை கே.பி.ராமலிங்கத்திடம் வழங்கியிருக்கிறது பாஜக டெல்லி தலைமை.

அதற்கேற்ப சில மாதங்கள் முன்பு 15 முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பிக்களை பாஜகவில் இணைத்து தம் திறமையை நிரூபித்துக் கொண்டார். இவர் இருப்பதால் அ.தி.மு.க, தி.மு.க இரண்டு தரப்பிலும் உள்ள வாக்குவங்கியை சிதைத்து தான் ஓட்டு வாங்கி விடுவார் என்கிறார்கள். இவரின் அசாதாரண இச்செயலால் பாஜக இங்கே இரண்டாமிடம் வந்து மூன்றாமிடத்திற்கு அ.தி.மு.க தள்ளப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

அதேபோல், நாம் தமிழர் சார்பில் பொறியாளர் கனிமொழி என்பவர் போட்டியிடுகிறார்.

எது எப்படியோ, கொ.ம.தே.க வெற்றிக்கனியை உதயசூரியன் சின்னத்தில் பறிப்பது உறுதியாகவே தெரிகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com