(வலமிருந்து) கார்த்திக் சிதம்பரம், சேவியர் தாஸ், தேவநாதன்
(வலமிருந்து) கார்த்திக் சிதம்பரம், சேவியர் தாஸ், தேவநாதன்

சிவகங்கை: கடும்போட்டியில் கார்த்திக்!

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தனது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்காக போராடி மீண்டும் சிவகங்கையைப் பெற்றிருக்கிறார் ப. சிதம்பரம். கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு கட்சியினரை கண்டு கொள்ளவில்லை, தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் கார்த்திக் சிதம்பரம்.

காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) மற்றும் புதுக்கோட்டையின் திருமயம், ஆலங்குடி என மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி.

1980லிருந்து 2019 வரையில் நடைபெற்ற 11 தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் ப. சிதம்பரம் 1984, 1989, 1991, 2004, 2009 ஆகிய 5 முறை தேசிய காங்கிரஸ் சார்பிலும், 1996, 1998 ஆகிய இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி சார்பிலும் களமிறங்கி வெற்றி பெற்றார்.

இதற்கு முன்பு 2014இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டி இருந்தது. அப்போது முதன் முறையாக கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். திமுக வேட்பாளர் துரைராஜ் 2,46,608, பாஜக-வின் ஹெச்.ராஜா 1,33,763 வாக்குகளைப் பெற்றிருந்தார். காங்கிரஸின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட தொகுதியில் நான்காவது இடம்தான் கிடைத்தது. கார்த்தி சிதம்பரம் அந்தத் தேர்தலில் 10,4678 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

2019இல் நடைபெற்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகளைப் பெற்று 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 2,33,860 வாக்குகள் மட்டுமே பெற்றார். அமமுக சார்பில் பேட்டியிட்ட வி.பாண்டி 2,22,534 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட சக்தி பிரியா 72,240 வாக்குகள் பெற்றார்.

சிவகங்கைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் நிற்கிறார். பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் சென்னையைச் சேர்ந்தவர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் திருவாடனைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதிமுக சார்பில் சிவகங்கைத் தொகுதியில் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனின் ஆதரவாளரான கல்லல் ஒன்றியச் செயலாளரான அ.சேவியர் தாஸ்-க்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார்.

சிவகங்கை நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி
சிவகங்கை நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசிOffice

கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக்கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு இம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தனர். அந்த சுணக்கம் முழுவதும் நீங்கிவிட்டதாகச் சொல்லமுடியாது. சிவகங்கை காங்கிரஸில் இருக்கும் பலருக்கு கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாட்டில் உடன்பாடில்லை. அதேபோல், திமுக சார்பிலும் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே சிவகங்கைத் தொகுதியைக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டனர். அதனால் அதிருப்தியிலுள்ள தி.மு.க.வினரும் உண்டு. சிவகங்கை தொகுதி என்றாலும் கார்த்திக் சிதம்பரத்தின் பார்வையெல்லாம் காரைக்குடியில் தான் இருக்கிறது சிவகங்கையில் இல்லை என்ற ஆதங்கம் சிவகங்கை மக்களிடம் இருக்கிறது. கார்த்தி சிதம்பரம் வேளாண் கல்லூரியையும் சட்டக் கல்லூரியும் அவரது தொகுதியான காரைக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டார். இதனால் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை நகராட்சியாகவும் காரைக்குடி மாநகராட்சி ஆகவும் உயர்த்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,” என்கிறார்கள். கார்த்திக் சிதம்பரத்தை அணுகுவது சிரமம் என்றும் மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் கூட என்ன நடந்திருக்கிறது? நடுநிலையான வாக்காளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். சிவகங்கையில் வங்கிகள் பரவலாகத் திறக்கப்பட்டு, மகளிருக்கு தொழில் செய்ய கடனுதவிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் தொழிற்சாலைகள் கொண்டுவரப்படவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. ஒரு மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் எவ்வளவோ செய்திருக்கலாம் என்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர் முத்தரையர், உடையார், செட்டியார், கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் என சமூக வாக்குகள் இருக்கின்றன. அதிமுக சார்பில் சேவியர்தாஸ் முக்குலதோர் சமூகத்தைச் சேர்ந்தவர், பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர், பாஜக எதிர்ப்பு வாக்குகளும், கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு வாக்குகளும் அதிமுக நோக்கிச் செல்லும் என்கிறார்கள். காங்கிரஸ் அதிமுக-விற்கு இடையே கடுமையான போட்டி சிவகங்கையில் நிலவுகிறது என்பதே கள யதார்த்தம்

logo
Andhimazhai
www.andhimazhai.com