தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியும், பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள் என்பதால் தென்காசி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
1957, 1962-ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் பொதுத் தொகுதியாக இருந்த தென்காசி, அதன் பின்னர் இப்போது வரை தனித்தொகுதியாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களில் உள்ள ஒரே தனி தொகுதி(நாடாளுமன்றம்) இதுவே. இத்தொகுதியில் தென்காசி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் (தனி), சங்கரன்கோவில் (தனி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவல்லிபுத்துார் (தனி), ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கும். இதில் ஆண் வாக்காளர்கள் 7,42,158 பேரும் பெண் வாக்காளர்கள் 7,73,822 பேரும் உள்ளனர். இவற்றில் தற்போது சங்கரன்கோவில், வாசுதேவநல்லுார், ராஜபாளையம்,ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திமுக வசமும்,கடையநல்லுார், ஸ்ரீவல்லிபுத்துார் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும்,தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங். வசமும் உள்ளன.
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் தொடர்ச்சியாக 9 முறை வெற்றிபெற்றுள்ளது. இதில் தொடர்ச்சியாக 5 முறை காங்கிரஸை சேர்ந்த எம். அருணாச்சலம் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவர் மத்தியமைச்சராகவும் பதவி வகித்தார்.1996-ஆம் ஆண்டு தமாக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 6-வது முறையாக அருணாச்சலம் வெற்றி பெற்றார். அதேபோல அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தலில் முதன் முறையாக திமுகவின் வெற்றிகோட்டையாக மாறியிருக்கிறது. திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் 4,76,156 வாக்குகள் பெற்றார். இவர் அதிமுக வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஆனால் இம்முறை தனுஷ் எம்.குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு சங்கரன்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ், மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைசிறுத்தைகள், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார். கூட்டணி கட்சிகளின் பலமும், திமுக, காங் தேர்தல் அறிக்கைகளின் பரப்புரையும், திமுக செய்த சாதனைகளை குறிப்பிட்டு சொல்லும் பிரச்சாரமும் வெற்றிக்கான பாதையை வகுத்துக்கொடுக்குமா? என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தென்காசி தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, இப்போது அதிமுக சார்பில் 7 முறையாக போட்டியிடுகிறார். அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி புதிய தமிழகம் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இருந்தாலும் தென்காசி தொகுதியில் முஸ்லிம் சமூகத்தினர் 9 சதவீத ஓட்டும் அவர்களுக்குதான் என்று கணிக்கமுடியாது. அதேபோல பட்டியல் சமூகத்தினர் 31 சதவீதம் இருந்தாலும் பெரும்பாலான ஓட்டுகள் மருத்துவர் கிருஷ்ணசாமிக்குதான் என்றும் குறிப்பிடமுடியாது. அவரும் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளார். “இந்த முறை மருத்துவருக்கு பக்கபலமாக கூட்டணி கட்சிகள் களம் அமைத்து கொடுத்துள்ளதால் வெற்றிக்கான பந்தய களத்தில் அவர் வலிமையுடன் இருக்கிறார்” என்று இத்தொகுதியைச் சேர்ந்த பேராசிரியர் முத்துலெட்சுமி நம்மிடம் குறிப்பிடுகிறார்.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக தென்காசி தொகுதியில் களம் காண்கிறார். பாஜக,அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் போட்டியிடுகிறார். இந்த கூட்டணி கட்சியில் பாஜக இந்துக்கள் வாக்குகளையும், அமமுக தேவர் சமூக (17 சதவீகிதம்) ஒட்டுகளையும் தமமுக பட்டியல் சமூக (31 சதவீகிதம்)ஓட்டுகளையும் நம்பிதான் களம் காண்கிறார். அதனால் வாக்குகளை வசப்படுத்த தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட இசை மதிவாணன் மீண்டும் போட்டியிடுகிறார். சுயேச்சைகள் உட்பட 13 பேர் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்குள்தான் தீவிர வாக்கு சேகரிப்பில் போட்டி நடக்கிறது. தென்காசி தொகுதியைப் பொறுத்தவரை பெண்கள் வாக்குகள் அதிகமாக இருப்பதால் அவர்கள் எந்தபக்கம் சாய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்று நம்பப்படுகிறது.