ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் - பா.ஜ.க. சொல்லும் 10 காரணங்கள்!

நாடு முழுவதும் ஒரே நாடு- ஒரே தேர்தல் எனும் பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில், பா.ஜ.க. தரப்பில் இதை ஆதரித்து வலுவாகக் கருத்து பரப்பிவருகின்றனர். அவர்கள் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதற்கான காரணங்கள் என்னென்ன?

இதுகுறித்து அக்கட்சியின் தமிழக துணைத்தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள கருத்து:

1. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து 1999 ஆம் ஆண்டே பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி இதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

2. முதல் நான்கு தேர்தல்களும் (1951, 1957,1962,1967) அதன் அடிப்படையிலேயே நடைபெற்றன. அதன் பின்னர் சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டதாலும், 1970ஆம் ஆண்டு முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாலும், இயல்பாக நடைபெற்று கொண்டிருந்த தேர்தல் முறையானது வழி தவறிப்போனது. நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்ற கொள்கையோடே விதிமுறைகள் அமைக்கப்பட்டன என்பதும், அரசுகள் கலைக்கப்படும் என்ற சிந்தனைகள் இல்லாது இருந்த நிலையில், வருடத்திற்கு சில மாதங்களில் தேர்தல்கள் என்ற சூழ்நிலையை உருவாக்கியது.

தெரியாது நாம் செய்த தவறை திருத்தி கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்..

3. தேர்தலைகளை ஒரே நேரத்தில் நடத்துவதால் மாநில உரிமைகள் பறிபோகும், மாநில கட்சிகளின் செல்வாக்கு குறையும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநில கட்சிகளுடனான கூட்டணி ஆட்சியே இந்த குற்றச்சாட்டை முறியடிக்கும்.

நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.
நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.

4. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில் மூன்று மாதங்களும், பின்னர் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மூன்று மாதங்களும் பெரிய திட்டங்கள், நலப்பணிகள் போன்றவைகள் செயல்படுத்தப்படாமல் இருப்பது, அந்த நேரத்தில் அதிகாரிகளின் பணியிட மாற்றம், கொள்கை முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை ஆகியவை அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

5. ஒரு சட்டமன்ற / பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் வெற்றி பெறுபவர் அந்த சட்டமன்ற காலத்திற்கு மட்டுமே நீடிக்க முடியும் என்ற விதி, ஒட்டுமொத்த சட்டமன்ற/பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடந்தால் பொருந்தாதா என்பது சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி.

6. பல்வேறு காலகட்டங்களில் தேர்தல்கள் நடப்பதால், வேட்பாளர்கள் அதிக பணத்தை செலவிட நேர்கிறது. வரையறுக்கப்பட்ட செலவை விட பன்மடங்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலையில், கருப்புப் பண புழக்கம் தேர்தல் காலங்களில் அதிகளவு புழக்கத்தில் இருப்பது ஊழல் அரசியலுக்கு வழிவகுக்கிறது. சமீப காலங்களில் 'ஓட்டுக்கு நோட்டு' என்பது அதிகரித்து வருவது மிக பெரிய சாபக்கேடாக விளங்கி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது கண்கூடு. பல சமயங்களில் பல இடங்களில் தேர்தல் என்பதால் கட்சிகளும் அதிக அளவில் நிதி திரட்ட வேண்டியிருப்பதும், அதனாலேயே அதிக நிதி கொடுப்பவர்கள் ஆதிக்கமும் அரசியலில் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது.

7. கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதற்கு ரூபாய் 3,870 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ரூபாய் பத்தாயிரம் கோடி செலவாகிறது. பணவீக்கத்திற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது என்பதும், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதை நாம் ஏற்று கொண்டாக வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

8. ஓவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியல் மாற்றம், திருத்தம், கூட்டல், கழித்தல் ஆகியவற்றில் அரசியல் முறைகேடுகளை நீக்க வேண்டுமெனில், அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் கால விரயத்தை, பண விரயத்தை குறைப்பதோடு, முறைகேடுகளை தடுக்கும்.

9. சில செய்திகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகளால் 1998ஆம் ஆண்டு தேர்தலில் 9000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், 2014ஆம் ஆண்டு 30,000 கோடி ரூபாயாக உயர்ந்த இந்தத் தொகை 2019ஆம் ஆண்டு 60,000 கோடி ரூபாயாக உயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

10. இதற்கான தேர்தல் சீர்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் பல காரணங்களால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த தேர்தலுக்கு குறுகிய காலம் இருந்தால், அடுத்த நாடாளுமன்றம் அமையும்வரை குடியரசுத் தலைவர் நாட்டின் நிர்வாகத்தை நடத்தலாம் அல்லது தேர்தலுக்கு நீண்ட காலம் இருந்தால், தேர்தலை நடத்தி அந்த தேர்தலில் வெற்றிபெறும் அரசு அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலம்வரையில் மட்டுமே இயங்கும் (அதாவது எஞ்சியுள்ள காலம் மட்டும்) வகையில் மாற்றங்களைக் கொண்டுவரலாம்.

அதேபோன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின் கட்டமைப்புத் திட்டங்கள் தடைபடாது மக்களைச் சென்றடைவதோடு நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அதைவிடுத்து, ’மாநில சுயாட்சி பாதிக்கும், மாநில கட்சிகளின் வலு குறையும்’ என்பது எல்லாம் ஒரு வலிமையான மாநிலத்தை, தேசத்தை வலுவிழக்க செய்யும் வாதங்களாகவே பார்க்கப்படும். இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com