இப்ப கூட்டணிக்கு என்னங்க அவசரம்? தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறதே… நான் மக்கள் பிரச்னைகளுக்காக உள்துறை அமைச்சரை சந்தித்தேன்’ என்று சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் பேசிய அந்த தமிழ்நாட்டு மக்கள் பிரச்னைகளைப் பற்றி பட்டியலிடுகிறார்.
தொலைக்காட்சியில் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுகோ, கேள்வி கேட்கும் நிருபர்களுக்கோ அது பற்றியெல்லாம் எந்த கவனமும் இல்லை. அதிமுக- பாஜக கூட்டணி உறுதி ஆகிவிட்டதா? அண்ணாமலையின் விமர்சனங்களை எல்லாம் மறந்து எடப்பாடியார் கைகோக்க தயார் ஆகிவிட்டாரா? பின்னணியில் என்ன நடந்திருக்கும்? இப்படியே கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என்று பாஜகவுக்கு எதிராக திமுக அடித்து ஆடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை சந்திக்கிறார் என்றால் எந்த வலுவான பின்னணிக் காரணமும் இல்லாமல் இருக்காது என்பதே அரசியல் கணிப்பாளர்கள் நம்பிக்கை.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனி ட்ராக் போட்டு மேலே இட்டுச் சென்று திமுகவுக்கு எதிராக நிறுத்தவேண்டும்; அதிமுகவை முந்திச்செல்லவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயன்றார். இதைத் தொடர்ந்து 2023 செப்டம்பர் மாதம் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய நிலையில் கூட்டணியை அதிமுக தலைமை உடைத்துக் கொண்டது. இத்தனைக்கும் அவர்கள் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவிடம் சொல்லிவிட்டுத்தான் விடைபெற்றார்கள்.
2024-இல் தனியாக நின்றதில் இரு தரப்புக்குமே பலத்த அடி. அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என அழுத்தம் தந்துவந்தனர். அண்ணாமலையும் விமர்சனங்களைக் குறைத்துக்கொண்டார். ஆனால் பாஜகவின் டெல்லி தலைமையின் நிலைப்பாடு அப்போதிருந்து ஒரே மாதிரியாகவே இருந்துவந்தது. அது ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பது. டிடிவி தினகரன், ஒபிஎஸ் இருவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவோ கூட்டணியில் இடம்பெற அனுமதிப்பதையோ எடப்பாடி விரும்பவில்லை என்பதும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணி முறிவதற்குக் காரணம்.
ஆனால் டெல்லி பாஜக தலைமையுடன் எப்போதும்போல் அதிமுக நல்லுறவைத் தான் பேணி வந்தது. ஒரு வார்த்தைகூட மத்திய அரசை விமர்சிப்பதில்லை. அதனால்தான் எடப்பாடியால் தற்போது,’ கொள்கை வேறு கூட்டணி வைப்பது என்பது வேறு’ என அழுத்தமாகவும் சூசகமாகவும் பேசமுடிந்திருக்கிறது.
அமித்ஷாவுடனான சந்திப்பில் கூட்டணி குறித்து என்ன பேசப்பட்டிருக்கிறது என நம்பத் தகுந்த வட்டாரங்களில் விசாரித்தோம்.
‘தமிழ்நாட்டு அரசியல் பற்றி எதையும் நீங்கள் சொல்லவேண்டியது இல்லை. எல்லாரும் எப்படி என்று எனக்குத் தெரியும். அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களையும் நான் பார்த்துக் கொள்கிறேன். திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் எதுவும் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என பொதுவாக அமித் ஷா கூறி விட்டாராம். அதிமுகவின் ஓபிஎஸ், தினகரன் என பிரிவுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவாக வாருங்கள் என அவர் சொல்லி அனுப்பி இருக்கிறார்.
இந்த விஷயங்கள் பற்றிக் கவனிக்க மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்போவதாகவும் அவர்கள் இந்த கூட்டணி பற்றிப் ஒழுங்கு செய்வார்கள் என்றும் அமித் ஷா கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலாவை சேர்ப்பது பற்றி எடப்பாடியார் கவலை தெரிவித்தபோது,’ நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என தோளில் தட்டி அனுப்பியிருக்கிறார் ஷா.
‘இவர்கள் சொன்ன எதையும் கேட்கும் நிலையில் அமித் ஷா இல்லை. நீங்கள் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே வந்திருந்தால் இப்போது முன்னை விட மேலும் வலுவாக இருந்திருப்போம்!’ என்று மட்டும் அவர் சொன்னதாகவும் பல புதிய அறிவிப்புகள், மாற்றங்கள் வரக்கூடும் என சூசகமாக சொல்லி அனுப்பி இருக்கிறார்.
அடுத்தமாதம் ஆறாம் தேதி ராமநவமி. அன்று பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறந்து வைக்க வருகிறார். அவர் திரும்பிச் செல்லும்போது அதிமுகவின் கோஷ்டிப்பூசல்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என விஷயம் அறிந்த வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அதிமுக தலைவர்கள் டெல்லி செல்லும் விவரத்தை முதல்முதலில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் சட்டமன்றத்தில் வெளியிட்டு,’ அவர்கள் நமது முக்கிய பிரச்னைகளைப் பற்றி அங்கே பேசவேண்டும்’ என கிண்டலாக கோரிக்கை வைத்தார். இந்த கூட்டணி விவகாரத்தை திமுக எப்படி அணுகும் என்பதற்கு இதுவே முன்னூட்டம்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்வதை இன்னும் சில மாதங்கள் தாமதமாகச் செய்யலாம் என்று எடப்பாடியார் கருதினாலும் பாஜக தலைமை அதை விரைவிலேயே முடிவு செய்து பணிகளைத்தொடங்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
எடப்பாடியுடனான சந்திப்பு முடிந்த உடனேயே அமித்ஷா எக்ஸ் தளத்தில் ‘ 2026-இல் தேசிய முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ எனக் குறிப்பிட்டதன் பின்னணியில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்ற தகவலே இருப்பதாகக் கூறப்படுகிறது.
பலமான திமுக கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பதே சட்டமன்றத் தேர்தலில் வெல்ல முதல் படி. என்ன ஆகிறது பார்க்கலாம்.