"அந்த மர்மத்தை தவெக அரசு விசாரிக்கணும்" அண்ணாமலை வைத்த கோரிக்கை

Annamalai
கு. அண்ணாமலை
Published on: 

சாலைப் பணிகளில் முறைகேடு செய்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

இது போன்ற த.வெ.க.வின் செயல்களை தான் வரவேற்பதாகவும், மேலும் கடந்த 5 ஆண்டுகளில் வெளிவந்த ஊழல்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதவாது :

"முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் எழுந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, த.வெ.க. அரசு நடவடிக்கைகள் எடுப்பதை நான் வரவேற்கிறேன்.

இந்த வழக்குகளை விரைவாக முடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது த.வெ.க. அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்த பின்வரும் முறைகேடுகள் குறித்து த.வெ.க அரசு கவனம் செலுத்தி, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதற்கேற்ப நடவடிக்கைகளையும் விரைவில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய சில ஊழல் புகார்கள் இதோ:

1. பி.ஜி.ஆர். எனர்ஜி முறைகேடு - விதிமுறைகளை மீறி ஒப்பந்தங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அவை வெளிச்சத்திற்கு வந்ததும் ரத்து செய்யப்பட்டது.

2. சத்துணவுத் தொகுப்பு முறைகேடு - 'ஆவின்' நிறுவனம் தயாரிக்க முன்வந்த போதிலும், தனியார் விற்பனையாளர்களிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்தது.

3. பொங்கல் வேட்டி முறைகேடு – பருத்திக்கு பதிலாக அதிகப்படியான பாலிஸ்டர் பயன்படுத்தப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

4. மாநிலப் போக்குவரத்துத் துறையில் நடைபெற்ற பல முறைகேடுகள் – பிரதிபலிக்கும் பலகைகள், வாகனத்தின் பின்புறக் குறியீட்டுத் தகடுகள் கொள்முதல் செய்தது.

5. டி.என்.எம். எஸ். சி முறைகேடு – பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல்.

6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட முறைகேடு.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு மர்மமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரசிகர் மன்றமும், 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்ட விசித்திரமான ஒற்றுமை குறித்தும் த.வெ.க. அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்ட உடனேயே 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனம் தமிழ்நாட்டில் ₹1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது குறித்தும் நாங்கள் பல ஆண்டுகளாகக் கேள்வி எழுப்பி வருகிறோம்.

இந்த மர்மங்களுக்கு த.வெ.க அரசு பதிலளிக்கும் என்று நம்புகிறோம்."

இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com