அசத்துகிறார் அன்சாரி!

தமிமுன் அன்சாரி அலுவலகம்
தமிமுன் அன்சாரி அலுவலகம்
Published on

“ஜூன் இதழில் வெளியான புதிய எம்.எல்.ஏக்கள் கவனத்துக்கு என்ற கட்டுரையைப் படித்தேன்” என்றவாறு தொலைபேசியில் அழைத்தார் சிதம்பரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அந்திமழையின் தீவிர வாசகர்களில் ஒருவருமான தமிமுன் அன்சாரி.

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

”அந்த கட்டுரையின் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ராவ் அவர்கள் கூறியிருந்த பல விஷயங்களை நான் நாகப்பட்டினம் எம்.எம்.ஏ.வாக இருந்த போதிருந்தே செய்து வருகிறேன்” என்றார். ஆச்சரியத்துடன் அப்படியா என்றோம்.

“அதில் இருந்த முக்கியமான விஷயங்களில் ஒன்று திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மொய்ப்பணம் வைக்க இயலாது என்பதை அறிவிக்கவேண்டும் என்பது. அதை நான் முன்கூட்டியே கடைப்பிடித்துவருகிறேன். என்னுடைய எம்.எல்.ஏ சம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய். அதில் எனக்கு மாதம் தோறும் வரும் நிகழ்வுகளுக்கு அன்பளிப்பாக பணம் அளித்தால் அதுவே ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும். நமது நேர்மையான செயல்பாடுகளுக்கு அது ஊக்கமளிக்காது. எனவே நான் நிகழ்வுகளுக்கு கட்டாயம் வருவேன்; வாழ்த்துகளை மட்டுமே தர இயலும். மரண நிகழ்வுகளுக்கு வருவேன்; துயரத்தைப் பகிர்வேன். ஆனால் மாலை வாங்கிச் செல்ல இயலாது. அதே போல் என்னைப் பார்க்க வருகிறவர்களும் பழங்கள் போன்ற பரிசுகளுடன் வரவேண்டாம் என அறிவித்துள்ளேன். மக்களுக்கு நான் நேர்மையுடன் பணியாற்றவே இந்த அறிவிப்பு என்பதை என் தொகுதி மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்” என்று தொடர்ந்தார் அன்சாரி.

“சிதம்பரம் தொகுதியிலும் இதையே தொடர்கிறேன். அத்துடன் என் அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் ஏற்பாடு செய்துள்ளேன். ஒரு நூலகமும் ஏற்கெனவே உருவாக்கி வைத்துள்ளேன். வாசலில் சின்னதாக வி.பி.சிங் பெயரில் ஒரு படிப்பகம் ஏற்பாடு செய்ய உள்ளேன். நான் ஊரில் இல்லாத நேரத்தில் கோரிக்கை மனுக்களை வாங்குவதற்காக ஊழியர்களும் பணிபுரிகிறார்கள். எனது பரிந்துரை நடவடிக்கையின் நகல் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கும் அனுப்பிட ஏற்பாடு செய்திருக்கிறேன்,’’ என்றார் அன்சாரி.

எம்.எல்.ஏ.அலுவலகத்தில் பார்வையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் மனத்தை லேசாக்க கூண்டில் ‘லவ் பேர்ட்ஸ்’ வளர்ப்பும் நடக்கிறதாம். வைபை இணைய இணைப்பும் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னபோது நம்பமுடியவில்லை!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com