புதிய எம்.எல்.ஏ.க்கள் கவனத்துக்கு!

புதிய எம்.எல்.ஏ.க்கள் கவனத்துக்கு!
Published on

எளிய மக்களும் 18 வயது இளைஞர்களும் திரண்டு வந்து வேட்பாளர் யாரென்று பார்க்காமல், ‘விஜய்’ முகம் பார்த்து வாக்களித்து த.வெ.கவை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் த.வெ.க. வெற்றி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதும், அரசியல் கட்சிகளுக்கு உதறல் எடுத்திருப்பதும் உண்மைதான்!

‘ஏய்! விட்டுவிடக்கூடாது… எம்.எல்.ஏ.வை ஆரம்பத்திலேயே நம்ம கண்ட்ரோல்ல வெச்சிருக்கணும்’ என்ற குரல் தொகுதிகளில் ஒலிப்பதை ‘பவர் கட்’ கிளர்ச்சிகளில் கேட்க முடிந்தது.

“உங்கள் வீட்டில் மட்டும் எப்படி விளக்கு எரிகிறது?’’ புதிய எம்.எல்.ஏ.வை மடக்க, அவர் ‘இன்வெர்டர்’ என்று சொல்லவேண்டியதாயிற்று என தஞ்சாவூர் நண்பர் ஒருவர் கூறினார். “அதுக்குள்ளே இந்த வசதி வந்துடுச்சா?’’ என்று கூட்டம் கேள்வி! பவர்கட் கிளர்ச்சியில் ஒரு காட்சி இது!

ஆகவே எம்.எல்.ஏ. நண்பர்களே! ‘அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா!’ என்று இருந்துவிட முடியும் எனத் தோன்றவில்லை!

‘ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம் அப்பா!’ எனப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்!

அறிஞர் அண்ணா வெற்றிபெற்ற உடனேயே பெரியார், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் எல்லோரையும் சந்தித்து அறிவுரைகளைப் பெற்றார்.

“மந்திரி ஆகிவிட்டதால் ராஜா காலத்து ஆட்சியை நினைத்து சர்வ அதிகாரம் இருப்பதாக கருத முடியாது! மந்திரியானாலும் மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. என்பதுதான் அடிப்படை. எதுவானாலும் மக்கள் நலனுக்கு சரிப்பட்டு வருமா என யோசித்து செய்யவேண்டும்” இது காமராஜர் அண்ணாவிடம் பேச்சுவாக்கில் சொன்னது!

புதிய எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதை முதல்வேலையாக செய்யவேண்டி இருக்கும். வழிதவறிப்போன பல ஜனநாயக நெறிமுறைகளை சரியான பாதைக்குத் திருப்பும் கடமை முதலமைச்சர் விஜய்க்கு இருக்கிறது.

எம்ஜிஆர் இதற்கு சற்று வழிவகுத்தார் என்பதில் சந்தேகம் இல்லை. டெல்லியில் இருந்து வந்த அரசியல் அலையில் அவர் தடுமாறவேண்டியதாயிற்று! முதல்வர் விஜய் அதை அறிந்திருப்பார்!

திடீர் என்று அரசியல் களத்துக்கு வந்துவிட்ட தவெக எம்.எல்.ஏ.க்கள் தெரிந்துகொள்ளவேண்டியதும் பின் பற்ற வேண்டியதும் நிறைய!

தன் தொகுதியின் வரைபடத்தை அலுவலக அறையில் வைத்திருக்க வேண்டும். தொகுதியை சில பிரிவுகளாகப் பிரித்து எங்கே என்ன தேவை என்பதைக் குறித்து- தொகுதி மக்கள் சந்திக்கும்போது- பேந்தபேந்த விழிக்காமல் இருக்கவேண்டும்! அதிகாரிகளிடம் நெருங்கியும் நெருங்காமலும் இருந்து தொகுதிப் பிரச்னைகளைத் தீர்க்கவேண்டும்!

நிச்சயம் கார் வேண்டும்! தெருவிலேயே நுழைய முடியாத பிரம்மாண்ட கார் அவசியம் இல்லை. மக்களை உறுத்துமாறு ‘கார் பவனிகள்’ கூடாது!

குறிப்பிட்ட நேரம் அறிவித்து குறைகளோடு வரும் தொகுதி மக்களை தினமும் சந்திக்க வேண்டியதே! பழக்கப்படுத்திக் கொண்டால் எரிச்சலாக இருக்காது! ரகசிய சந்திப்பு இடங்கள் கூடாது! நண்பர்கள் பட்டாளம் கூடாது!

பல எம்.எல்.ஏ.க்களுக்கு எடுத்த உடனேயே ஒரு தலைவலி உண்டு. தொகுதி மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் விசேசங்களுக்கு பூ பழங்கள் நிரம்பிய தட்டில் அழைப்பிதழை வைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்! திருவிழாவுக்கு மாலை மரியாதையோடு கலந்துகொள்ள அழைப்பிதழுடன்!

எம்.எல்.ஏ.க்கள் அஞ்சு, பத்து என்றா மொய் எழுதமுடியும்? ஐயாயிரம், பத்தாயிரம் என்று கூட தர நேரிடும்! “நாங்கள் எங்கே போவது? நாங்கள் கைநீட்டத் தொடங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்” எம்.எல்.ஏக்கள் முணுமுணுப்பதைக் கேட்டதுண்டு.

“மொய் எதிர்பார்க்காதீர்கள்” என்று அலுவலக வாசலில் அறிவிப்பு பலகையே வைக்கலாம்!

சட்டமன்றக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு கேள்வி நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! திமுக முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தபோது வட ஆற்காடு மாவட்ட எம்.எல்.ஏவாக இருந்தவர் அண்ணாமலை. கேள்வி நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் என்று அமைச்சர்களைத் திணற அடித்தார். அவருக்கு சற்று திக்கும்! அதைப்பற்றி கவலைப் பட்டதில்லை. அவை முன்னவராக இருந்த சி.சுப்ரமணியம் பலமுறை அவரைப் பாராட்டி இருக்கிறார். “அடுத்தமுறையும் ஜெயித்து வாருங்கள். எம்.எல்.ஏக்களுக்கு முன்மாதிரி நீங்கள்” என்றார் சி.எஸ். மறுமுறை கட்சி அவருக்கு டிக்கெட் தரவில்லை.

சட்டமன்ற நூலகத்துக்கு முடிந்தபோதெல்லாம் போகவேண்டும்! பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். காலையில் சீக்கிரம் எழுந்து அன்றைய செய்தித்தாள்களைப் படித்து அன்று என்ன செய்யவேண்டும் என தயார் செய்துகொள்ளவேண்டும் கலைஞர் போல்! கலைஞரிடமிருந்து இம்மாதிரி விஷயங்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன!

தடம் மாறிப்போன ஜனநாயகம் சரியான பாதைக்குத் திரும்புவது போல் தெரிகிறது. பொறுமை இழந்த இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்! வாய்ச்சவடால், சாதி மத உணர்வுகளைத் தூண்டுவது- இனி பலன் தராது!

தமிழ்நாட்டில் த.வெ.க. வெற்றியையும் அடுத்து நடப்பதையும் இந்திய மாநிலங்கள் ஒருநாள் விடாமல் கவனிக்கும்! உங்கள் கையில் ஆட்சி மட்டுமல்ல! ஜனநாயகத்தில் எதிர்காலமும் இருக்கிறது!

எங்கள் எம்.எல்.ஏ.க்களே உஷார்! உஷார்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com