ஜெயலலிதா காலத்து வழக்கமான பிரச்சார பாணியை மாற்றி அதிரடியாக தன் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஜெ. சுயநினைவுடன் இருந்ததுவரை அ.தி.மு.க.வின் பிரச்சாரம் தலைநகர் சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிவடையும். அவர் போனபிறகு நிலைமை தலைகீழாகிவிட்டது.
அரசியல் பிரச்சார வழிமுறைகளும் கட்சிகளின் கைகளில் இருந்து கார்ப்பரேட் நிறுவன ஸ்பெஷலிஸ்டுகளின் கைக்குப் போய்விட்டன.மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று பழனிசாமியின் பிரச்சாரம் தொடங்கினாலும், அதற்கு முன்னரே இன்னொரு புதிய முன்மாதிரியும் நிகழ்ந்தது.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணத்துக்கு தனியாகப் பெயரே சூட்டப்பட்டு, முதல் முறையாக பிரச்சாரத்துக்கு இலச்சினையும் வெளியிடப்பட்டது. மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்பதுதான் முழக்கம்!
அதிமுகவில் ஜெயலலிதா, அதற்கு முன்னர் எம்ஜிஆர் தனித்தே பிரச்சாரம் மேற்கொள்வர். எடப்பாடி பழனிசாமி கூட்டணிக் கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரனையும் முதல் நாள் பிரச்சார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்சி தந்தார். ஜெயலலிதா அமைச்சரவையின் முன்னாள் சகாக்களான இரண்டு பேரும் இணைந்து செய்த பிரச்சாரத்தை, பொது மக்கள் இரசிக்கவே செய்தனர்.
முப்பது நாள்களுக்குள் 100 தொகுதிகளையாவது சுற்றிவந்துவிட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. இடையிடையே ஆங்காங்கே பருவம் மாறிப் பெய்த மழை, பல்வேறு சில அரசியல், பொது நடப்புகள் குறுக்கிட்ட நிலையில், 34 நாள்களில் 100 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்தார், எடப்பாடி பழனிசாமி.
தொடங்கியது மேற்கில்தான் என்றாலும் அப்படியே அந்த வட்டாரத்தை முடித்துவிட்டு, அடுத்த பகுதிக்கு நகரவில்லை. அசரவைக்கும்படி அப்படியே தாவி, விழுப்புரம் பக்கம் போய், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், மயிலம், செஞ்சி, பக்கத்து மாவட்டமான கடலூரில் பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, அவற்றைத் தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், யூடர்ன் அடித்தபடியாக, காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை ஒரு ரவுண்டு அடித்தார்.
போகிற இடங்களில் எல்லாம், ஒரேமாதிரியான பேச்சுதான். மாநில ஆளும் கட்சியால் மக்களுக்கு விலைவாசி உயர்வு, நீட் தேர்வு மோசடி வாக்குறுதி, விவசாயிகள் வாக்குறுதிகள் நிறைவேற்றாமை, வாரிசு அரசியல், ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் என சளைக்காமல் பேசினார், பழனிசாமி. அதை கடைசிவரை விடாமல் பிடித்துக்கொண்டு பேசிவருகிறார். அவரின் இந்தப் பேச்சுக்கு வரவேற்பு கிடைப்பதாகவே சொல்கிறார்கள், களச் செய்தியாளர்கள். காரணம், மத்திய, மாநில இரண்டு ஆளும் கட்சிகள் மீதும் மக்களுக்கு பொதுவான குறைகள் பல இருக்கின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளாக இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிட்டாலும், இப்போதாவது எடுத்துச்சொல்கிறாரே என மக்கள் கூறுவதாகச் சொல்கிறார்கள் அவர்கள்.
குறிப்பாக, இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்துகொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அவர் பல இடங்களிலும் குறிப்பிட்டுச் சொன்னார். மதுவிலக்கு, மின்கட்டண உயர்வு, காவல்துறையில் நடக்கும் அத்துமீறல், கொட்டடிக் கொலைகள், மரணங்கள், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் என சம்பவங்கள்வாரியாகப் பட்டியலிட்டார்.
ஜெயலலிதா ஆட்சியிலும் தன்னுடைய ஆட்சியிலும் நடைபெற்ற திட்டங்களையும் பணிகளையும் பெருமைபடப் பேசவும் அவர் தவறவில்லை. வழக்கம்போல், நானும் ஒரு விவசாயி என்பதை எல்லா கிராமங்களில் சொன்னார். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடம் ஒதுக்கீடும் முக்கிய முழக்கமாக ஒலித்தது.
ஒருவழியாக, ஜூலை 23ஆம் தேதியுடன் முதல் சுற்றுப் பிரச்சாரம் முடிவடைந்தது.
இரண்டாம் கட்டப் பிரச்சாரத்துக்கு அதிக நாள்கள் விடாமல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து தொடங்கினார். அவரை அசத்திவிட்டார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். உருட்டுகளும் திருட்டுகளும் என தி.மு.க.வின் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டனவா இல்லையா என்பதை மக்களிடமே கேட்டு பதில்சொல்லி பிரச்சாரம் செய்யக்கூடிய விளையாட்டைப் போல, வட்டத்துக்குள் வட்டம் சுழலக்கூடிய அட்டை வடிவப் பிரச்சாரத்தை அங்கு தொடங்கினார்கள். ஆனால் அதை எத்தனை ஊர்களுக்குக் கொண்டுபோனார்கள் என்பதைப் பற்றி தகவல் இல்லை. தொடக்க விழாவை மட்டும் பிரமாண்டமாகச் செய்துகாட்டினார்கள்.
காவிரிப் பாசனப் பகுதி முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடல், நாகை, நெல்லை, தூத்துக்குடியில் மீனவர்கள், பல ஊர்களில் அந்தந்த ஊர்சார்ந்த தொழில்துறையினர், தொழிலாளர்களுடன் குறைகேட்பு என மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆவதற்கு முன்னர் செய்த பாணியை, எடப்பாடியும் இந்தப் பிரச்சாரத்தில் கையில் எடுத்துள்ளார். கடந்த ஆட்சியைப் பற்றிய குறைகள் இருந்தாலும், அவரின் இந்த அணுகலுக்கு சாதகமான பலன் கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும். நேரலையில் அவரிடம் மக்கள் தங்கள் பிரச்னைகளை இயல்பாக எடுத்துச் சொன்னார்கள் என்பதை ஆளும் தரப்பில் மறுத்தோ எதிர்த்தோ எதுவும் சொல்லவில்லை என்பது கவனத்துக்குரியது.
நொடிகளில் தப்பினார்
ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கிய பழனிசாமி, கிருஷ்ணகிரியில் ஆரம்பித்து நூல் பிடித்தாற்போல, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என தலைநகர் சென்னையை ஒட்டி முடிப்பதாகத் திட்டம். ஆனால், இதில் மாற்றம்செய்யப்பட்டு திருச்சி வட்டாரத்தில் முடிவடைந்தது.
இந்தச் சுற்றில், ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருடைய வாகனம் சரியாக ஒரு அலங்கார வளைவைக் கடந்ததும் அடுத்தபடியாக வந்த அ.தி.மு.க.வினர் வாகன வரிசை மீது அந்த வளைவு அப்படியே சரிந்து விழுந்தது. அதில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பியபின்னர் அங்கிருந்து புறப்பட்டார், பழனிசாமி. இந்த சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்னர்தான் பக்கத்திலுள்ள ஆம்பூரில் வைக்கப்பட்ட பேனர் காற்றுமழையில் விழுந்து மகனும் தந்தையுமாக இருவர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இப்படி வரவேற்பு பேனர்களை வைக்கமாட்டோம், வைக்கக்கூடாது என்று சொல்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. கள நிலவரமோ தொடர்கதைகளாக இருக்கின்றன.
திட்டமிட்டபடி துல்லியமாக நடக்காவிட்டாலும், 34ஆவது நாளில் 100ஆவது தொகுதிப் பிரச்சாரத்தை முடித்துவிட்டார், எடப்பாடி. அதற்குள் அவர் 10 ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடந்துவிட்டார்;
நடத்திய கலந்துரையாடல்களின் எண்ணிக்கையும் 150-க்கும் மேல்!
எல்லா தொகுதிகளிலும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட உத்தேச வேட்பாளர்கள் சிலரை வாகனத்தில் ஏற்றத் தவறாதவர், இரட்டை இலை சின்னத்துக்கும் வாக்குகேட்டார். கோவில்பட்டியில் பேசுகையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவையும் நயினார் நாகேந்திரனையும் வைத்துக்கொண்டு கூட்டணிக் கட்சிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கினாலும் வாக்களியுங்கள் என்பதையும் அழுத்தமாகச் சொல்ல, கடம்பூரார் முகம் ஒருகணம் சட்டெனச் சுருங்கிப்போனது.
ஆக.25 அன்று மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தை முடிப்பதற்கு முன்னரே, நான்காவது கட்டப் பிரச்சாரத்தை செப்டம்பர் முதல் தேதியன்று தொடங்குவதற்குத் தயாராகிவிட்டார்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
தன்னுடைய பிரச்சாரத்துக்கு இடையே எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி, அண்ணாமலையின் திடீர்ப் பேச்சு! ஆக.22ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் முகவர் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்பாகப் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க நாம் உழைக்கவேண்டும் என்று அங்கு கேட்டுக்கொண்டார். சரியாக கடந்த ஆண்டு இதே மாதத்தில்தான் எடப்பாடியை அண்ணாமலை மிகவும் கடுமையாகச் சாடி, அ.தி.மு.க.வினரின் கடும் எதிர்ப்பை வாங்கிக்கொண்டார்.
ஆம்புலன்ஸ் அலர்ஜி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பழனிசாமி ஆகஸ்ட் 18 அன்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது நோயாளர் அவசர ஊர்தி ஒன்று அவரின் பிரச்சாரக் கூட்டத்துக்குள் புகுந்தது. கும்பலாகத் திரண்டிருந்த தொண்டர்கள், கூட்டத்துக்கு இடையூறு செய்வதாகக் கோபமாகி ஊர்தி ஓட்டுநரைத் தாக்க முற்பட்டனர். மைக்கில் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி, உடனடியாகப் பேச்சை நிறுத்தி, அவரை அடிக்காதீங்கப்பா என்று கட்சியினருக்கு அறிவுரை சொன்னார். ஒருவழியாக அந்த அவசர ஊர்தி கூட்டத்தைவிட்டுக் கிளம்பியது. ஆனால் அடிக்கப் பாய்ந்த தொண்டர்கள் மிச்சம் வைத்துவிட்டதாக நினைத்தாரோ என்னவோ, எடப்பாடியும் தன் பங்குக்கு கொஞ்சம் வார்த்தைகளை விட்டுவிட்டார். இனிமேல் இப்படி கூட்டத்துக்கு இடையூறாக ஆம்புலன்ஸ் வந்தால், வண்டியை ஓட்டிவருபவரே நோயாளியாகப் போகவேண்டியிருக்கும் என்கிறபடி எடப்பாடி கொதிநிலைக்குப் போக, பெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டன. பல தரப்பிலும் எடப்பாடிக்கு எதிராக கடுமையான கண்டனக் கணைகள் பறந்துவந்தன. சம்பவத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர் என்பவரோ, அணைக்கட்டு மருத்துவமனையிலிருந்து நோயாளி ஒருவரை மேல்சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லும் வழியில்தான் கூட்டத்தில் மாட்டிக்கொண்டதாக பின்னர் விளக்கம் அளித்தார்.
அதென்னவோ அ.தி.மு.க.வுக்கு இந்த முறை ஆம்புலன்ஸ் ஒவ்வாமை போல இருக்கிறது. முதல் முறையாக தாக்குதல் மிரட்டல் அளவுக்கு எடப்பாடியே போய், வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகும், திருச்சியில் மீண்டும் இன்னொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கவும் வண்டியை உடைக்கவும் அ.தி.மு.க. கூட்டத்தில் ஒரு கும்பல் எல்லை மீறியது, தொலைக்காட்சிகளில் நேரலையானது. இது இந்தப் பயணத்தில் பெரிய கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டது.
இவரது சுற்றுப்பயணத்தின்போதுதான் பிரதமர் மோடியும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு ராசேந்திர சோழன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வந்திருந்தார். அவரை திருச்சியில் சந்தித்தார் எடப்பாடி. அதே சமயம் ஓபிஎஸ் சந்திக்க விரும்பியபோதும் அவருக்கு நேரம் மறுக்கப்பட்டது. எடப்பாடியாரின் தெளிவான நிலைப்பாட்டை பாஜக அங்கீகரித்து, ஒபிஎஸ்ஸை நட்டாற்றில் விட்டதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்பட, ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆலோசித்து ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்க நேர்ந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த சுவையான சம்பவம் காற்று வாக்கில் காதில் விழுந்தது. ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் பாஜக தலைவர் நயினார் தந்த 109 உணவு வகைகள் கொண்ட விருந்தில் எடப்பாடியாரிடம் பாஸந்தி இனிப்பை அளித்த நயினார், ‘எங்களுக்கும் ஓர் இனிப்பான செய்தியை ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்க்க ஒப்புதல் கொடுப்பதன் மூலம் அளியுங்கள்’ என சிரித்துக்கொண்டே கேட்டிருக்கிறார். எடப்பாடியார் அந்த இனிப்பையே தொடவில்லையாம்!