
தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.இரவி திருவண்ணாமலைக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னையிலிருந்து நேற்று புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்த ஆளுநரை, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வரவேற்றார். பல மதரீதியான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஆலுநர் இரவி, நேற்று கிரிவலப் பாதையில் காஞ்சி சாலையில் சாமியார்களுடன் சந்திப்பை நிகழ்த்தினார். அவர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
இன்று காலையில் அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் தன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
முன்னதாக, ஆளுநரின் தொடர்ந்த பல பேச்சுகள் அறிவியலுக்குப் புறம்பாக இருப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து அவருடைய வருகைக்கு எதிராக ரமணா ஆசிரமம் முன்பாக நேற்று மாலையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூ. கட்சி, இந்திய கம்யூ. கட்சி (மார்க்சிஸ்ட்) , மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்பட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். கைதுசெய்யப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.