குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அளித்த ஒடியா புத்தகம்!

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அளித்த ஒடியா புத்தகம்!

சென்னைக்கு நேற்று வருகைதந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை, விமானநிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.இரவியும் குடியரசுத்தலைவரை வரவேற்றார். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, இளைய அமைச்சர் உதயநிதி உட்பட பலரும் அப்போது உடனிருந்தனர். அரசுத் தலைவர் முர்முவுக்கு அவரின் தாய்மொழி ஒடியாவில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை முதலமைச்சர் நினைவுப்பரிசாக வழங்கினார். சென்னையில் உள்ள செம்மொழி ஆய்வு நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முற்பகல் தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூருக்கு வந்த குடியரசுத்தலைவர், அங்கிருந்து நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு பிற்பகல் 3.45 மணிக்கு வந்தடைந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் மதிவேந்தன், ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குச் சென்றார்.

ஆவணப் படம் மூலம் பிரபலம் அடைந்த பாகன் தம்பதி பெள்ளி- பொம்மன் இருவரையும் முர்மு நேரில் பாராட்டினார். மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தின் 28 பாகன்கள், கோவை ஆனைமலை காப்பகத்தின் 10 பாகன்களையும் குடியரசுத்தலைவர் உரையாடினார். 6 வளர்ப்பு யானைகளுக்கும் கரும்புகள் வழங்கினார். அங்கு அளிக்கப்படும் உணவுவகைகளைப் பற்றியும் அவர் கேட்டறிந்தார்.

முதுமலையில் முக்கால் மணி நேரம் இருந்த அவர், மசினகுடிக்குச் சென்றார். அங்குள்ள கடைவீதியில் தன்னைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்த மக்களைப் பார்த்து, காரைவிட்டு இறங்கி இனிப்பு வழங்கினார். அப்போது, சிறுமி ஒருவர் குடியரசுத்தலைவருக்கு புத்தகம் ஒன்றை வழங்கினார்.

அங்கிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு, மைசூருக்குச் சென்று, விமானம் மூலம் இரவு 7 மணிக்கு சென்னையை வந்தடைந்தார். முதலமைச்சர், ஆளுநரின் வரவேற்பைப் பெற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் இரவில் ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, நாளை புதுச்சேரியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com