மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி
மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி

மோடி மேடையில் தமிழக கட்சித் தலைவர்கள்... யார் யார்?

தேசிங்குராஜாவும் குதிரையும்- அரசியல் கிசுகிசு பகுதி

 ‘நேற்று வருகிறேன் என்றாய்..வரவில்லையே?’ தேசிங்குராஜன் குதிரையிடம் கோபமாகக் கேட்டான்.

‘மன்னா… வருகிறேன் எனச் சொல்லிவிட்டு வராமல் இழுத்தடிப்பது தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சமயத்தில் சகஜம்தானே..’ குதிரை ஒரு சிரிப்புடன் தேசிங்குராஜனை சமாதானப்படுத்தியது.

‘விசிகவினர் திமுகவுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுப்பது பற்றிச் சொல்கிறாய்.. விசிக மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்கிறது. திமுகவோ ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்கிறது…  இந்த இழுபறி என்னவாகும் எனப் பார்ப்போம்.. எதற்காக இருந்தாலும் ஒரு முடிவு உண்டல்லவா?’

”இடதுசாரிகளை ஆளுக்கு இரண்டு கொடுத்து திமுக செட்டில் பண்ணிவிட்டது. கமல்ஹாசன் கூட்டணிக்கு வந்து அவருக்கு கோவை கொடுக்கும் பட்சத்தில் இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகளில் மாறுதல் வரலாம் என்பதால் தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை’’ குதிரை தன் பங்குக்கு ஒரு பிட்டைப் போட்டது.”

“அனேகமாக எல்லோருக்கும் முன்பாக திமுக அணி சீட்டுப் பங்கீட்டை முடித்துக்கொண்டு களத்தில் இறங்கிவிடுவார்கள் போலிருக்கிறது… காங்கிரஸில் தொகுதிகளில் சில மாறுதல்கள் இருக்கலாமாம். அது முடிந்தால் சட்டென்று இறுதி அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள்’’

“அதிமுக பற்றி உங்கள் ஒற்றர்படைத்தலைவர் செய்தி ஏதும் உண்டா?’

“வெளிப்படையாக தேமுதிகவிடம் பேச்சைத் தொடங்கிவிட்டனர். பாமகவும் சரி தேமுதிகவும் சரி…. மாநிலங்களவை சீட் கேட்டு டிமாண்ட் செய்வதாகக் கேள்வி…”

“தேர்தலில் வெற்றி பெறாமல் போனால் நம் ஆள் ஒருவரை மாநிலங்களவைக்காவது அனுப்பலாம் என அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?’’

“அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிகவுடன் புதிய தமிழகமும் இடம் பெறும் என்பது இப்போதைய கணிப்பு.. டெல்லியில் இருக்கும் சக்திகள் என்ன நினைக்கின்றன என்பதும் இரட்டை இலை முடக்கப்படும் என்கிற மிரட்டல் என்ன ஆகும் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயங்கள்” என்றான் தேசிங்கு.

”சின்னம் என்றதும் ஞாபகம் வருகிறது.. நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் கிடைக்குமா?”

“ அதையெல்லாம் மேலே இருப்பவன் தீர்மானிக்கிறான் என்பதால் சீமான் எல்லாவற்றுக்கும் தயார் என்று சொல்லிவிட்டாராம். அந்த சின்னம் இல்லையென்றால் ட்ராக்டர் சின்னம் கேட்பார்கள் போலிருக்கிறது. அண்ணனின் பிரச்சாரம் போதும், எதையும் எதிர்கொள்வோம் என அக்கட்சியின் முன்னணி நிர்வாகி நம் ஒற்றர் படைத் தலைவரிடம் சொல்லி இருக்கிறார்’ என சிரித்தான் தேசிங்கு.

”போதைப்பொருள் கடத்தல் செய்திகளை வைத்து எதிர்க்கட்சிகள் திமுகவை ஒரு வழி பண்ணாமல் விடாது போலிருக்கிறதே..” என்ற குதிரை வாலைச் சுழற்றி பெரிய கொசுவை அடித்தது.

“ இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தி தேர்தல் விஷயமாக மாற்றலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. திரையுலகமும் கூட சற்று மிரண்டுதான் கிடக்கிறது. இயக்குநர் அமீர் மாட்டிக்கொண்டு விழிக்கிறார். தயாரிப்பாளர் ஜாபர்சாதிக்கிடம் கதைசொல்லி அடுத்த படம் தங்களுக்கு என்று கனவோடு இருந்தவர்கள் அதிர்ச்சியும் அதேசமயம் தப்பித்தோம் என்ற உணர்ச்சியும் அடைந்துள்ளனர்.”

“ அரசியலிலும் சரி கலையுலகிலும் சரி.. கவனம் தேவை என்பதை எல்லோரும் இப்போது உணர்ந்திருப்பார்கள்” என்ற குதிரை ‘மார்ச் 4 ஆம் தேதி சென்னையில் மோடி பேசுகிறாராமே?’’ என்றது.

“ஆமாம்.தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார். அந்த மேடையில் டிடிவி தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் பார்க்கலாம்,.  இவர்களுக்கு ஆறும் நான்கும் என கூட்டணியில் சீட்டுகள் வழங்கப்படும் என பேச்சு அடிபடுகிறது. தேர்தலுக்கு முன்பாக ஏழெட்டு கூட்டங்களில் தமிழ்நாட்டில் மோடி பேசுவார். அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி மேடையில் அவர் பேசுவதைக் கண்டு அதிமுக தொண்டர்களே குழம்பித்தான் போயிருக்கிறார்கள் ”

"விஜய் கட்சி செய்தி ஏதேனும் உண்டா?’’

‘’தேர்தலையொட்டி தன் ரசிகர்களை நோக்கி நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் சொல்லப்போகிறாராம்!”

”ஓஹோ…’ என்று குதிரையை லாயத்தை நோக்கி தள்ளிக்கொண்டு போனான் தேசிங்கு.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com