
இன்று அதிமுகவைச் சேர்ந்த ஏழெட்டு குதிரைகள் பனையூரை நோக்கி நாலுகால் பாய்ச்சல் பயணம் மேற்கொண்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவையும் ‘மெர்சல்’ ஹீரோ விஜய்யையும் இணைத்து காலம் போடும் கோலம் என்றொரு சுவாரசியமான தகவல் பரவி வருகிறது.
2016-21 ஆட்சிக்காலத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடம்பூர் ராஜூ செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள சந்தித்துவந்த விஜய், 2017 தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படத்துக்கு அனிமல் வெல்ஃபேர் சர்டிபிகேட் கிடைக்காமல் சிக்கலில் இருந்தார். விடிந்தால் தீபாவளி .முதல் நாள் இரவு சர்டிபிகேட் கிடைக்காவிட்டால் படம் ரிலீஸாகாது என்கிற நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மூலம் எடப்பாடியை சந்திக்க விஜய் சென்றபோது சுமார் மூன்று மணி நேரம் வரை விஜய் காக்கவைக்கப்பட்டார்.
காட்சி மாறி அதே விஜய் இன்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலையில் கடம்பூர் ராஜூ தனது படைபரிவாரங்களுடன் விஜய் கட்சியில் இணைய பனையூர் சென்றிருந்த நிலையில் க.ராஜு அன் கோ அனைவரும் விஜய்யின் பனையூர் அலுவலகத்தில் அதே மூன்று மணிநேரத்துக்கும் மேலாக காக்கவைக்கப்பட்டனர்.
மெர்சல் பிரச்சினையின்போது மூன்று மணி நேரம் காக்கவைக்கப்பட்டாலும் எடப்பாடியை சந்தித்தார் விஜய். ஆனால் இன்று விஜய்யை சந்திக்க முடியாமல் அமைச்சர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் சேரவேண்டிய நிலை. ஆடி அடங்கும் வாழ்க்கையடா… அரசியல்ல இதெல்லாம் சகஜமடா.