டி ஆர் பாலு
டி ஆர் பாலு

எ.வ.வேலு பற்றி பிரதமர் பேச்சு- அவைக் குறிப்பிலிருந்து நீக்க டி.ஆர்.பாலு கடிதம்

மக்களவையில் தமிழக அமைச்சர் எ.வ.வேலுவைப் பற்றி பிரதமர் மோடியும் அமைச்சர் ஸ்மிருதி ரானியும் பேசியவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க திமுக கடிதம் அளித்துள்ளது. மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அவைத்தலைவர் ஓம் பிர்லாவிடம் இக்கடிதத்தையும் அமைச்சர் பேசியதன் காணொலியையும் இணைத்து வழங்கினார்.

முன்னதாக, கடந்த 5ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நூல் வெளியிட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அதில் அவருடைய பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவரை பிரிவினைவாதி என்று பூடகமாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, மக்களவையில் அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நேற்றுமுன்தினம் ராகுல் பேசி முடித்தபிறகு பேசிய அமைச்சர் ஸ்மிருதி ரானி, இந்தியா என்றாலே வட இந்தியாதான் என திமுக அமைச்சர் பேசியிருப்பதை ராகுல் காந்தி கண்டிப்பாரா எனக் கேட்டார்.

அமைச்சரைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி ஆற்றிய நீண்ட பதிலுரையிலும், திமுகவின் பெயரைக்கூட குறிப்பிடாமல், காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் அமைச்சர் ஒருவர், இந்தியா என்பது ஒரு பொருட்டே இல்லை; அவரைப் பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவிலேயே இல்லைபோல என்றும் குறிப்பிட்டார்.

இப்படி அடுத்தடுத்து தமிழ்நாட்டின் அமைச்சரைப் பற்றி மக்களவையில் மரபுக்கு மீறி பேசியதால், திமுக தரப்பு கடும் விசனம் அடைந்தது.

அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி முறைப்படியான முன்னறிவிப்பு எதுவுமின்றி இப்படிப் பேசுவதும், உண்மைக்கு மாறாகப் பேசியிருப்பதும் தவறானது என்றும் எனவே, பிரதமரும் அமைச்சரும் அமைச்சர் வேலுவைப் பற்றிப் பேசிய பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு கடிதம் அளித்துள்ளார்.

அமைச்சர் வேலுவின் முழுப் பேச்சு அடங்கிய ஆதாரத்தையும் அவர் தன் கடிதத்துடன் இணைத்து வழங்கியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com