
"ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று. ஒருபோதும் எதிர்பார்க்காத எதோ ஒன்றை, அது உங்களுக்காக பொத்தி வைத்து காத்திருக்கும். எப்போதும்.”
’சிதம்பர நினைவுகள்’ நூலில் மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் சுள்ளிக்காடு.
தற்போதைய தமிழக மலிவான அரசியல் நிலவரம் குறித்து எழுத இவ்வளவு காவியமான மேற்கோள் வேண்டுமா என்று கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது.
ஏதொன்றுக்கும் இருந்துதான் தொலைக்கட்டுமே…
தேர்தல் முடிவுகள் வரத்துவங்கிய நிமிடத்திலிருந்து இந்த நிமிடம் வரை கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை, இன்னொரு பக்கம் உலகத்தமிழர் ஏரியாக்கள் வரை விஜய்தான் தலைப்புச் செய்தியாக இருக்கிறார்.
ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்திருக்கவேண்டும் என்பதில் தொடங்கி அளவில்லா அபிப்ராயங்கள்.
காங்கிரஸுடன் அவர் கைகோத்தது மாபெரும் அரசியல் பிழை. எனவேதான் திராவிட கட்சிகளை சிண்டுமூட்டிவிட்டு பாஜக அவரை பழிவாங்குகிறது என்பது தலையாய தலைப்புச் செய்தியாக இருக்கிறது.
பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்பதை தாரக மந்திரமாக வைத்திருந்த திமுகவும் திருமாவளவனும் கள்ள மவுனம் காப்பதோடு, தங்களைத் தாண்டி ஒரு மூன்றாவது சக்தி உள்ளே வந்துவிட்டதை ஜீரணிக்க முடியாமல் ‘எதற்கும்’ துணிய காத்திருப்பதை என்னவென்று சொல்வது ?
இன்னொரு பக்கம் எடப்பாடியும் நாவில் நீர் சுரக்க தனது நாற்பத்திச் சொச்ச எம்.எல்.ஏ.க்களை புதுவை ரிசார்ட் ஒன்றில் அடைக்காத்து வருகிறார்.
கம்யூனிச தோழர்களோ காலையில் திருமாவுடனும், மதியத்தில் ஸ்டாலினுடனும் மாலையில் சொல்லவொண்ணா பெருங்குழப்பத்துடனும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இச்சூழல் நீடித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய ஆளுநரோ, ‘அதிமுக, திமுக இணைந்து பெரும்பான்மை காட்ட முன்வந்தால் அவர்களுக்கும் ஆட்சியமைக்க வாய்ப்பளிக்கப்படும்’ என்று திகில் கிளப்புகிறார்.
திமுகவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருந்தவர்கள் என்று சொல்லப்படும், ஓவர் ஓசை ஊடக உபிக்கள், இடையில் சற்று டல்லாக இருந்து, நடக்கிற குழப்பங்களால் மகிழ்ந்து மீண்டும் தில்லாக களமாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த ஆட்சியின் பதவிக்காலம் முடிந்து 48 மணிநேரம் ஆகியும் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த குழப்பம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை அதிகரித்துக்கொண்டே போகிறது.
விஜய் முதல்வராவதை தடுக்கும் எண்ணம் இல்லை. அவருக்கு 6 மாத கால அவகாசம் அளித்துப் பார்க்கலாம் என்று சில நிமிடங்கள் ஆசுவாசம் அளித்த ஸ்டாலின் அறிவாலயத்தில் அடுத்தடுத்து கூட்டங்கள் கூட்டி, குறிப்பாக திருமாவையும் தோழர்களையும் பெட்டிப்பாம்பாய் பாதுகாத்து வருகிறார். தந்திரமான தீர்மானங்களும் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஸ்டாலினும் எடப்பாடியும் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார்கள். இவர்களது இளவல்களான உதயநிதியும் மிதுனும் அதைவிட நெருக்கத்தில் இருக்கிறார்கள். இந்த நெருக்கத்துக்கு பாலமாக இருப்பவர், பல்லாயிரம் கோடிகளுக்கு அரசு காண்ட்ராக்ட் எடுக்கக்கூடிய, ஒரு பிரபல பில்டர் என்கிறார்கள். ‘நீயும் நானும் ஒண்ணு. நம்மை எதிர்க்கிறவன் வாயில மண்ணு’ என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை.
அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகத்தான் க்ரீன்வேஸ் சாலை அமைச்சர்கள் ‘இப்போதைக்கு நாங்கள் அரசு பங்களாவை காலி செய்ய முடியாது’ என்று சொல்லுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
சற்று முன்னர் வந்த பிரேக்கிங் செய்திகளில் தம்பிதுரை போன்ற அதிமுக தலைவர்கள்,’ எடப்பாடி முதல்வராவதையே மக்கள் விரும்புகிறார்கள்.’ என்று ஓபனாக பேட்டியே கொடுக்கத் துவங்கியிருக்கிறார்.
நடப்பவை அனைத்தையும் பாஜகவின் டெல்லி மேலிடமும், சென்னை முகாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இப்போதைய நிலவரப்படி எடப்பாடியை முதல்வராக்கி, வெளியிலிருந்து ஆதரவு அளிக்க திமுக முடிவெடுத்துவிட்டது என்கிறார்கள்.
விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த ஒருகோடியே 70 லட்சம் வாக்காளர்களை தங்கள் வீட்டு கிள்ளுக்கீரையாக நினைப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? என குழம்புகிறார்கள் நடுநிலைப் பார்வையாளர்கள்.
பீஹார், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் நாம் பார்த்த கூட்டணி பல்டிகள், களேபரங்களை இங்கும் பார்க்கப் போகிறோமா?
மேலே இருப்பவருக்கே வெளிச்சம்.