கன்னியாகுமரியில் மோடி
கன்னியாகுமரியில் மோடி

இழு.. இழு…. ஆட்களை இழுங்கள்! தேர்தல் களேபரம்!  

தேசிங்கு ராஜாவும் குதிரையும் - அரசியல் கிசுகிசு பகுதி

”வந்ததே தேர்தல் தேதி வந்ததே….” பாடியவாறே  மதில் சுவரைத் தாண்டி அரண்மனைக்குள்ளே குதித்தான் தேசிங்கு ராஜா. அவன் பின்னாலேயே குதிரையும் குதித்தது.

“ மன்னா, சொந்த அரண்மனைக்குள்ளேயே இப்படி சுவர் தாண்டிக் குதிக்கலாமா?’’

“ லூஸ்ல வுட்ரு ப்ரோ..” என்ற தேசிங்கு மெல்ல நடந்தவாறே… ”ஏப்ரல் 19 தேர்தல் என இவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் தேதி விரைவாக வந்துவிடும் என தமிழகக் கட்சிகள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சட்டுபுட்டென்று களத்தில் அவர்கள் குதித்தாகவேண்டும்’’

”மன்னரே…. ஆளுங்கட்சியினர் ஏற்கெனவே செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அந்தந்தப் பகுதிகளுக்கு என்று செய்து கொண்டுபோய் சேர்த்துவிட்டதாகச் சொல்கிறார்களே..”

“உஷாராகத்தான் இருப்பார்கள். தேர்தல் தேதியை மார்ச் 16 அன்று அறிவிக்கவேண்டாம். சில நாள்கள் கழித்து அறிவிக்குமாறு வட இந்தியாவில் சில ஜோதிடர்கள் சார்பில் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையர்கள் பற்றி ஒரே களேபரமாக இருப்பதால் அதெல்லாம் வேண்டாம் என நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு (ஏப்ரல் 16) அன்று அறிவித்தார்கள் எனக் கூறப்படுகிறது.”

"மத்திய அரசுக்கு தேர்தல் சமயத்தில் உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சி போலச் செயல்படுகிறதே?”

“அப்படித்தான் பா.ஜ.க.வில் நினைக்கிறார்கள்... ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திர விவகாரத்தில் போட்ட போடு அதிர்ச்சியை அளித்ததே?”

“அது சரி.. தேர்தல் ஆணையர் அருண் கோயல் தேர்தல் தேதி அறிவிக்க ஒரு வாரம் இருக்கையில் ஏன் திடீரென பதவி விலகினாராம்?’’

“குதிரையே, அதெல்லாம் மேலிடத்து சமாச்சாரம்… மேற்கு வங்கத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையருடன் அருண்கோயலும் தேர்தல் வேலைகளை மேற்பார்வை செய்யப் போயிருந்தார். அங்கேதான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். தலைமைத் தேர்தல் ஆணையர் தனியாகத்தான் பத்திரிகையாளர்களை அங்கே சந்தித்தார். அருண் கோயல் சட்டென்று பாதியிலேயே டெல்லி திரும்பிவிட்டார். வந்தவர் ஓரிரு நாளில் தலைமைத் தேர்தல் ஆணையருக்குகூடத் தெரிவிக்காமல் தன் பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அவரை சமாதானப்படுத்த உயர்மட்டம் முயற்சி செய்தும் முடியவில்லையாம்”

“ஓ” என்ற குதிரை காலை உயர்த்தியது.

“தமிழ்நாட்டில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் யாருடன் கூட்டணி என சொல்லாமல் இதுவரை இழுத்துப்பறித்து வருகின்றன. பா.ஜ.க., அ.தி.மு.க. என இரு தரப்புமே பேசிவருகிறார்கள். பா.ஜ.க. தரப்பில் இரு கட்சிகளையும் இழுத்துவிட வாய்ப்புகள் அதிகம். அ.தி.மு.க. பக்கம் பா.ம.க. போக விரும்பினாலும் எடப்பாடியார் தொகுதிகள் விஷயத்தில் கறாராக இருப்பது சிக்கலை அதிகரிக்கிறதாம்”

“ஓ.பி.எஸ். நிலவரம் என்ன?’’

“இரட்டை இலையை முடக்கவேண்டும் என தொடர்ந்து அவர் தரப்பில் முயற்சி செய்கிறார்கள். அவரோ தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்பாமல் பா.ஜ.க.வுக்கு ஆதரவு மட்டும் தருவார் எனச் சொல்லப்படுகிறது. அவரது மகனும் தேனி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் ஒரு வேளை பா.ஜ.க.வில் சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்ற செய்தி பரவுகிறது. அ.தி.மு.க. தரப்பில் இருந்து மேலும் சில தலைவர்களை பாஜக பக்கம் இழுக்க ஒ.பி.எஸ்.ஸின் உதவி நாடப்பட்டதாம்..  தி.நகரில் ஒரு ரகசிய இடத்தில் இதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாம். ஆனால் அதில் இதுவரை பெரிய பலன் கிட்டாததால் சம்பந்தப்பட்டவர்கள் அப்செட்!”

”மோடி கன்னியாகுமரி வந்து சென்றுள்ளாரே..””

“ ஆமாம். அவருடன் மேடையில் புதிய வரவான சரத்குமார் தன் துணைவி ராதிகாவுடன் தோன்றியதைக் கண்டாய் அல்லவா? மோடி எப்படியும் தமிழ்நாட்டில் கால்பதித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்… கால் பதித்து என்றவுடன் ஞாபகம் வருகிறது… விரைவில் அவரது வெற்றிக்காக ராமேஸ்வரத்தில் ஒரு யாகம் நடக்க இருக்கிறதாம். கன்னியாகுமரி வந்தபோது அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகத் தகவல்!’

“ஒற்றர் படைத் தலைவரைப் பார்த்தீர்களா மன்னவா?”

“ஓ. அவரா.. தேர்தல் நெருங்கிவிட்டதால் எல்லா அரசியல் தலைவர்களும் ஜோதிடர்களைத் தேடி ஓடுகிறார்கள். எனவே, எங்காவது ஜோதிடர் வீட்டுவாசலில் அவரும் இருப்பார்… பெரிய தகவலுடன் அடுத்தவாரம் வருவார்!” என்றான் தேசிங்கு.

குதிரை லாயத்தை நோக்கி நடக்க,, தேசிங்கு அந்தப்புரம் நோக்கி  நடைபோட்டான்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com