விறுவிறு விருதுநகர்.. பாஜக சார்பில் களமிறங்கும் பிரபல நடிகை?

விறுவிறு விருதுநகர்.. பாஜக சார்பில் களமிறங்கும் பிரபல நடிகை?

தேசிங்குராஜாவும் குதிரையும்- அரசியல் கிசுகிசு பகுதி

”ஒரு வழியாக விசிக- திமுக கூட்டணியில் சீட்டுப்பகிர்வு முடிவாகி விட்டது போலிருக்கிறதே?’’ என்றவாறே குதிரை படியேறி அரண்மனைக்குள் நுழைந்தது. உள்ளே நின்றுகொண்டிருந்த தேசிங்கு சிரித்தான்.

“ஆமாம். அதற்குள் அதிமுகவில் இருந்து இரண்டு தடவை வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து கட்சிக்காரர்களை கலவரப்படுத்திவிட்டார்கள். கடைசியில் ஆதவ் அர்ஜுனுக்காகக் கேட்ட மூன்றாவது தொகுதியை விட்டுக்கொடுத்து இரு தனித் தொகுதிகளாக சிதம்பரம், விழுப்புரம் என பெற்றுக்கொண்டு திருமா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்!’

“ஆனாலும் இதில் அவருக்கு வெற்றிதான் என்கிறார்கள்?’’

“ஒரு விதத்தில் பார்த்தால் பானை சின்னத்திலேயே இரு தொகுதிகளிலும் போட்டியிடுவது வெற்றிதான். உதய சூரியன் சின்னத்தில் கடந்தமுறை விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் எளிதாக வெல்ல, சிதம்பரத்தில் திருமாவளவன் பானை சின்னத்தில் சிரமப்பட்டார். இந்தமுறையும் இரு தொகுதியிலும் சிரமப்பட்ட நேர்ந்தால் என்னவாகும் எனத் தெரியவில்லை” என்ற தேசிங்கு அங்கிருந்த மஞ்சம் ஒன்றில் சாய்ந்தான்.

“வைகோவும் ஒரு தொகுதி. அதுவும் பம்பரம் சின்னம்தான். விருதுநகர் வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம்.. இவரே சொந்த சின்னத்தில் போட்டியிடுகையில்…. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் ஜெயிப்பவர்கள் எண்ணிக்கை குறையுமல்லவா?’’

“ஆம். இதை எப்படி திமுகவினர் எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. முக ஸ்டாலினின் பரந்த உள்ளம் என்று சொல்லிவிடலாமா?”

“ சொல்லிக்கொள்ளுங்கள்.. காசா பணமா?” என்றது குதிரை.

“ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவுக்குக் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை எப்படிக் கோட்டை விட்டது என்ற கடுப்பில் எல்லோரும் உள்ளனர். இந்த சமயத்தில் செய்யப்பட்ட சமரசங்களில் இதுவும் ஒன்று எனச் சொல்லிவிடலாம்!”

“சரி ஏதும் அதிமுக தரப்பு செய்திகள் உள்ளனவா?’’

“புதிய தமிழகம், பாமக தேமுதிக என ஒரு கூட்டணி அமைக்க எடப்பாடியார் திட்டமிடுகிறார். இப்போதுவரை புதிய தமிழகத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. திரைமறைவு இழுபறிகள் விரைவில் முடிவாகிவிடும். ஒரு விஷயம் மட்டும் அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசுகிறார்கள்”

“என்ன அது?’’

“பழைய எம்பிகளுக்கு வாய்ப்பு கொடுப்பதைக் குறைத்துக்கொண்டு புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க எடப்பாடி திட்டமிடுகிறாராம்! நன்றாக செலவு செய்யும் வல்லமை கொண்ட ஒப்பந்தக்காரர்களாக தொழில் செய்யும் பலருக்கு வாய்ப்புக் கிட்டலாம் என்பதுதான் அந்த பேச்சு”

“பாஜக தரப்பில் என்ன பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறதாம்?”

“ தமிழ்நாட்டில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பட்டியலுடன் தமிழகத் தலைவர்கள் டெல்லிக்குச் சென்று அளித்துவிட்டார்கள். பட்டியலில் பல பெயர்கள் ஆச்சர்யம் அளிக்கலாம். தென் சென்னையில் பாஜகவின் மூத்த தமிழகத் தலைவர் ஒருவரை நிறுத்துகிறார்களாம். பெயரைக் கேட்டால் ஆச்சர்யமாக இருந்தது!”

“ம்”

“நம் ஒற்றர் படைத் தலைவரை வழியில் சந்தித்தேன். பாஜக தரப்பில் விருதுநகரில் போட்டியிடப்போகும் வேட்பாளராக ஒரு சிலரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அக்கூட்டணியில் சேர்ந்த தென்மாவட்டப் பின்னணிகொண்ட நடிகரின் மனைவியும் அகன்ற திரை மற்றும் சின்னத் திரை பிரபலமுமான மூத்த நடிகை களமிறக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்”

‘அடே.. மடக்குதிரையே.. நீ இப்படி விவரித்து சொல்வதற்குப் பதிலாக அந்த பிரபலத்தின் பெயரையே சொல்லிவிடலாமே..” என்று சிரித்தான் தேசிங்கு.

“மன்னவா.. இது கிசுகிசு பத்தி என்பதை மறந்துவிட்டீரா?’ என குதிரை பதிலுக்கு சிரித்து வைத்தது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com