தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், ஆளுநர் உரையுடனான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக முந்தைய தி.மு.க. அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, மே 13ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்று த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, அதைத்தொடர்ந்து தேசிய கீதத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. சட்டப்பேரவையின் மரபுப்படி முதலில் ஆளுநர் அர்லேகர் உரையாற்றினார்.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அவரின் உரையைத் தமிழில் வாசித்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் பேசியதாவது :
"கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முந்தைய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதல் காரணம் மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கும் போதைப் பொருள் புழக்கம்தான். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது." என்று ஆளுநர் குறிப்பிட்டார்.