23 ஜூன் , 2022 அதிமுக பொதுக்குழுவில்
23 ஜூன் , 2022 அதிமுக பொதுக்குழுவில்

எடப்பாடி கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்: உயர் நீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 23 அன்று நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில், தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளித்த முந்தைய தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வெளிநடப்பு செய்தது. பன்னீர் மீது தண்ணீர் குடுவைகள் வீசப்பட்டன.

அதையடுத்து, ஜூலை 11ஆம் தேதி மீண்டும் ஒரு பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்கள் பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இரு தரப்பும் மாறிமாறி தாக்கல்செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு செல்லுமா, செல்லாதா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என கூறிவிட்டது.

அதன்படி ஓபன்னீர் தரப்பின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஜூன் 28ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அறிவித்தனர். ஓ.பன்னீர் தரப்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com