காங்கிரஸ் வெற்றி
காங்கிரஸ் வெற்றி

கர்நாடகத்தை காங்கிரஸ் கைப்பற்றியது எப்படி?

ஏகப்பட்ட கருத்துக் கணிப்புகள், முயற்சிகள்… இவற்றையெல்லாம் மீறி கர்நாடக மாநிலத்தைக் கைப்பற்றி உள்ளது காங்கிரஸ் கட்சி. 135 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.  அக்கட்சியின்வாக்கு சதவீதமும் ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தக் கூடுதல் வாக்குகளே அதன் பிரமாண்ட வெற்றிக்கு வழி வகுத்தன.

இம்மாநில சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், கடந்த 1985ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஆளுங்கட்சி வெற்றி பெற்றதில்லை. அதே போக்கே இந்த தேர்தலிலும் தொடர்ந்துள்ளது.  இருப்பினும் பாஜகவின் வாக்கு சதவீதம் பழைய மாதிரியே உள்ளது. ஆனால் மூன்றாவது கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் 5 % வாக்கு வங்கியை இழந்திருக்கிறது. 

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸும் பாஜகவும் களத்தில் மூர்க்கமாக மோதிக் கொண்டன. தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க பாஜக முயற்சித்தது. ஆனால், ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருந்த அவநம்பிக்கையை பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ் கட்சி.

 கர்நாடக தேர்தல் தொடர்பாக லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு தேர்தலுக்கு முன்பு நடத்திய ஆய்வின் படி, பத்தில் நான்கு பேர் (39%) யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில், தேர்தலுக்கு முன்பே உறுதியாக இருந்துள்ளனர். இதில் பாஜகவுக்கு 47% பேரும், காங்கிரஸுக்கு 37% பேரும்,  மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 34% பேரும் ஆதரவு தெரிவித்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து வயதினருடைய ஆதரவும், பாஜகவுக்கு இளைஞர்களின் ஆதரவு இருந்துள்ளது. காங்கிரஸுக்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புற அளவில் கணிசமான அளவுக்கு வாக்காளர்கள் இருந்துள்ளனர். பாஜகவுக்கு நகர்ப்புற உயர் வகுப்பினரிடையே அதிகப்படியான ஆதரவு இருந்ததாக தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக உயர் வகுப்பினரின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், பின்தங்கிய வகுப்பினரின் (9%) ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே அதிக அளவு இருந்துள்ளது. அதுதான் வெற்றிக்குப் பங்காற்றிஉள்ளது.

 முக்கியமாகக் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது எதுவென்றால், அனைத்து தரப்பினரையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்தது தான். ஒக்காலிக்கா, குருபாஸ், தலித்துகள், இஸ்லாமியர்களின் ஆதரவைக் காங்கிரஸ் பெற்றிருந்தது. மேலும், பாஜக-வை காட்டிலும் பழங்குடி மக்களின் ஆதரவைக் காங்கிரசே அதிகம் பெற்றிருந்தது. லிங்காயத்துகள் மத்தியில் பாஜக அதிக அளவு வேலை செய்திருந்தாலும், அதில் பத்தில் மூன்று வாக்காளர்கள் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்  லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் இல்லாதது, கடைசி நேரத்தில் அச்சமூகத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரஸுக்கு வந்தது போன்றவை இந்த மாற்றத்துக்கு வழி கோலி இருக்கலாம். ஆனால் ஷெட்டரே தான் போட்டியிட்ட ஹுப்ளி தார்வார் தொகுதியில் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிராக செய்யப்பட்ட தீவிர பிரச்சாரம் காங்கிரஸுக்குக் கைகொடுத்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மோடி பலமுறை வந்து மேற்கொண்ட பிரச்சாரமும் அவரது பஜரங் பலிக்கு ஜே கோஷமும் கைகொடுக்கவே இல்லை என்பதுதான் சோகம். ஊழலுக்கு எதிரான கட்சியாக தன்னை முன் வைத்த பாஜக, அதனாலேயே வழுக்கி விழுந்திருப்பது அதன் அடுத்த அடிகளைத் தீர்மானிக்கும்.

அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு உற்சாகத்தையும் பாஜகவுக்கு எச்சரிக்கையும் அளிக்கும் விதத்தில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com