உதயநிதி - ஜெய் ஷா
உதயநிதி - ஜெய் ஷா

நான் தேர்தலில் நின்று அமைச்சரானேன்; உங்கள் மகன் ஜெய் ஷா எப்படி பதவிக்கு வந்தார்? – அமித்ஷாவிற்கு உதயநிதி கேள்வி!

நான் மக்களை சந்தித்துத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன். உங்கள் மகன் ஜெய் ஷா, பிசிசிஐ அமைப்பிற்கு எப்படி தலைவரானார் என்று அமித்ஷாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின். திமுக தொடங்கிய போது அப்போதிருந்த தலைவர்களுக்கு என்ன வயது என்பதை குறிப்பிட்டுப் பேசினார். இளைஞர் அணியினர் மாவட்ட தலைமை கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமித் ஷா நேற்று என்னை பற்றி பேசியிருக்கிறார். கழகத்தலைவருக்கு என்னை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்று.

நாம் மக்களை சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு, தலைவரின் உத்தரவின் பேரில் அமைச்சராகியிருக்கிறேன்.

நான் அமித்ஷாவை கேட்கிறேன். உங்கள் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா? ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014இல் வெறும் ரூ.75 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி அவருக்கு எப்படி வந்தது? என்று கேள்வி எழுப்பினார்.

சேலம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. அதை சிறப்பாக நடத்த வேண்டும்” என பேசி முடித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com