கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பு!

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பு!
Published on

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் இன்று பதவியேற்றனர். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். 

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. இதையடுத்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா முதல்வராகவும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று பெங்களூர் ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் (Sree Kanteerava Stadium) மதியம் 12.30 மணிக்கு நடந்த விழாவில் பதவியேற்றனர்.   மேலும் இவர்களுடன் சேர்ந்து 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே சி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மத்தியப் பிரதேச மாஜி முதல்வர் கமல்நாத் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். சோனியா காந்தி பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான ராஜா பங்கேற்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விழாவில் பங்கேற்காத நிலையில், அவருக்குப் பதிலாக மேற்கு வங்க அரசு சார்பில் மக்களவை எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் கலந்து கொண்டார். 

அதேபோல், இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படாததால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com