கர்நாடக வெற்றி: காங்கிரசுக்கு கிடைத்த செய்தி என்ன?

கர்நாடக வெற்றி: காங்கிரசுக்கு கிடைத்த செய்தி என்ன?

கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பலத்தபோட்டிக்குப் பின்னால் காங்கிரஸ் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. சித்தாரமையா முதலமைச்சராக பதவியும் ஏற்றுக்கொண்டார். யார் முதல்வர் என்கிற போட்டி அவருக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாருக்கும் இடையே நிகழ்ந்து, மேலிடம் சித்தாராமையாவை, எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தேர்வு செய்தது.

கர்நாடகத்தில் நடந்துமுடிந்த தேர்தல் பல்வேறு கோணங்களில் மிக முக்கியமானது. அடுத்த ஆண்டு 2024-இல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக விரும்புகிறது. அதை  முறியடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி அதற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தான், சத்திஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெற்ற வெற்றிக்குப் பின்னால் நடந்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறவே இல்லை. பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் நிபுணர்கள் காங்கிரஸுக்கு எதிர்காலமே இல்லை; நிறைய அக்கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டி உள்ளது என தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்ட ராகுல் காந்திக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்வு செய்யவும் அக்கட்சி பாடாய்ப் பட்டது ஞாபகமிருக்கலாம். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரைக்குப் பின்னால் அக்கட்சிக் குள் சற்று நம்பிக்கை பிறந்திருந்தால் இத்தேர்தல் முடிவு அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதன் மூலம் தென்னிந்தியாவில் புதுச்சேரி தவிர அனைத்து மாநிலங்களில் பாஜக ஆட்சிப்பொறுப்பில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. காங்கிரஸ் அற்ற இந்தியாவை உருவாக்க நினைப்பதாக  சொல்லிவரும் பாஜகவுக்கு இது கசப்பான செய்தி.

கர்நாடக தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவை அதன் அடிப்படையான கொள்கையான ஊழல் எதிர்ப்பிலேயே கைவைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது முக்கியமாகக் கருதப்படுகிறது. அனைத்து அரசுத் திட்டங்களிலும் 40 சதவீதம் கமிஷன் கேட்கும் ஆட்சியாக இது நடத்தப்படுகிறது என்று அனைத்து நாளிதழ்களிலும் காங்கிரஸ் விளம்பரம் அளித்தது. அதே நாளில் பாஜகவும் பழைய காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு விளம்பரம் தந்தது.

இந்த விளம்பர உத்தியிலேயே காங்கிரஸ் வேறொரு அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரங்களில் உள்ளூர் தலைவர்களின் முகங்கள் இடம்பெற்றன. கர்நாடகத்தின் பெருமையை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில் இத்தேர்தலை காங்கிரஸ் கட்சி அணுகியது. ஒரு தேசியக் கட்சி வழக்கமாக இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்காது. பாஜக விளம்பரங்களில் உள்ளூர் தலைகள் குறைவாகவே தென்பட்டன. இந்த நிலைப்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.

‘பாஜகவில் முக்கியமான உள்ளூர் தலைவர் என்றால் அது எடியூரப்பா. அவர் ஆரம்ப காலங்களில்  சைக்கிளில் பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்த்தவர். அதைவிட அவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவர். அவர் வழக்கமாகப் போட்டியிடும் சிக்காரிபுரா சட்டமன்றத் தொகுதி இஸ்லாமியர்களைக் கணிசமாகக் கொண்டது. அவர் 75 ஆண்டு வயது வரம்பை முன்னிட்டு முதல்வர் பதவியில் இருந்தும் தேர்தல் அரசியலில் இருந்தும் விலகிவிட்டார். அவரது மகனுக்கு சிகாரிப்புரா தொகுதி வழங்கப்பட்டபோது, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது பெரும்திரளான இஸ்லாமிய மக்களும் கூடி இருந்தனர். இதுபோன்ற சக்திவாய்ந்த உள்ளூர் தலைவர்களை ஒதுக்கும் அணுகுமுறை வெற்றியைப் பெறும் அணுகுமுறை எனச் சொல்ல முடியாது' என்கிறார் கர்நாடக அரசியல் நோக்கர் ஒருவர்.

ஏனெனில் பாஜக சென்றத் தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்கியதோ அதையே இந்த தேர்தலிலும் பெற்றுவிட்டது. ஆனால் அது வெற்றிக்கு வழிவகுக்கவில்லை. வெற்றியைத் தருவதற்கான கூடுதல் வாக்குகளைப் பெறும் வித்தையைப் பாஜக கோட்டை விட்டுவிட்டது எனலாம்.

இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக்கணிப்பில் இத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 19 சதவீதம் பேர், பிரதமர் மோடிக்காகவே வாக்களித்ததாகக் கூறி உள்ளனர். இது அவரது செல்வாக்கைக் காட்டு கிறது. அதே சமயம் இது தொலைநோக்கில் சில கேள்விகளையும் அரசியல்வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு இலவசப்பேருந்து, வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 உதவித் தொகை போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இருந்தன. அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ உணவு தானியங்கள் கட்டணமின்றி வழங்கப்படுமென்ற அறிவிப்பும் இருந்தது. 200 யூனிட்கள் இலவச மின்சாரம், மகளிருக்கு மாதம் 2000 உதவித் தொகை என்ற இரு அறிவிப்புகளும் பெரிதும் விவாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட தமிழகத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகள் போன்றவையே. எப்படி செயல்படுத்துகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் இன்னும் மகளிருக்கு 1000 ரூ என்கிற அறிவிப்பை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

மாறாக பாஜகவின் அறிவிப்புகள் இந்த அளவுக்கு கவர்ச்சியாக அமையவில்லை. ஆண்டு 3 எரிவாயு சிலிண்டர் இலவசம், வறுமைக்கோட்டுக் கீழிருப்போருக்கு 5 கிலோ உணவு தானியப் பை, பத்து லட்சம் வீட்டுமனை போன்ற விஷயங்கள் அதில் உண்டு.

கர்நாடகாவின் முக்கிய பால் ப்ராண்ட் நந்தினி ஆகும். இதற்கு எதிராக, குஜராத்தின் அமுல் பால் பொருட்களை கர்நாடகாவில் அறிமுகப்படுத்தவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்குவதாக பெரும் சர்ச்சை எழுப்பப்பட்டது. கடைசியில் இதை சமாளிக்க வீட்டுக்கு தினமும் அரை லிட்டர் நந்தினி பால் வழங்குவோம் என பாஜக தேர்தல் அறிக்கை சொன்னது! ஆனால் மக்கள் ஆட்சிக்குப் பால் ஊற்றிவிட்டார்கள்!

ரைட்டு... கர்நாடக வெற்றி சொல்லும் செய்தி என்ன?

பதவியேற்பு விழாவுக்கு எல்லா எதிர்க்கட்சிகளும் வந்திருந்தன. ஆனால் ஒரிசாவின் நவீன் பட்நாயக், ஆந்திராவின் ஜெகன் மோகன், தெலுங்கானா சந்திரசேகர் ராவ், உபியில் அகிலேஷ், டெல்லி ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அழைக்கப்படவில்லை/ வரவில்லை. பாஜகவின் அசுர பலத்தை எதிர்கொள்ள இன்னும் விரிவான கூட்டணியும் ஒத்த கருத்தும் உருவாக்கப்படவேண்டும். அதற்கான பாதையில் இன்னும் நீண்டதூரம் காங்கிரஸ் பாதயாத்திரை போகவேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

ஜூன், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com