(வலமிருந்து) எம்.எஸ். தரணிவேந்தன், ஜி.வி.கஜேந்திரன், அ.கணேஷ்குமார்
(வலமிருந்து) எம்.எஸ். தரணிவேந்தன், ஜி.வி.கஜேந்திரன், அ.கணேஷ்குமார்

மக்களவைத் தேர்தல்: ஆரணி யாருக்கு?

பட்டுக்கும், களம்பூர் அரிசிக்கும் பெயர் பெற்ற நகரம் என்று அழைக்கப்படுவது ஆரணி. இந்த நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டு இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 4ஆவது தேர்தலை சந்திக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவைத் தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆரணி மக்களவை தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடக்கம்.

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர், ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கிருஷ்ணசாமி 3,96,728 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் 2,89,898 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

பின்னர், 2014இல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செஞ்சி ஏழுமலை 5,02,721 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்போதைய திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சிவானந்தம் 2,58,877 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பா.ம.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி 2,53,332 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தையும், தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் 27,717 வாக்குகள் பெற்று 4ஆவது இடத்தையும் பிடித்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கே.விஷ்ணு பிரசாத் 6,17,760 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட்ட செஞ்சி வி.ஏழுமலை 3,86,954 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழரசி 32,409 வாக்குகள் பெற்றார். ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 3 சுயேட்சைகள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் வேட்பாளர் பாக்கியலட்சுமி
நாம் தமிழர் வேட்பாளர் பாக்கியலட்சுமி

கட்சி சார்பாகவும் சுயேட்சையாகவும் நிற்கும் வேட்பாளர்கள் பலரும் புதுமுகங்கள் ஆவர். தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன், அ.தி.மு.க. சார்பில் ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பா.ம.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ அ.கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கு.பாக்கியலட்சுமி, பகுஜன் சமாஜ் சார்பில் துரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதைபோல், சுயேட்சை வேட்பாளராக நிற்கும் பி. கணேஷ்குமார், மு.கணேஷ்குமார், ஏ. கஜேந்திரன், ஜே. கஜேந்திரன், தரணி ஆகியோரின் பெயர்கள் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்களின் பெயர் போன்று இருப்பதால் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

தொகுதி கோரிக்கை

ஆரணி தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டுச் சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் இது நவீன அரிசி ஆலைகள், அரிசி உற்பத்தியாளர்கள் நிறைந்த தொகுதியாகும். எனவே நெல் அரிசி உற்பத்தி தொழில்பேட்டை அமைத்து, மத்திய, மாநில அரசு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. திண்டிவனம் - ஆரணி - நகரி ரயில் பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

அதைபோன்று வந்தவாசி பகுதியில் கோரைப்பாய் உற்பத்தி தொழில் நலிவுற்று வருவதால், மத்திய, மாநில அரசுகள் கோரைப்பாய் தயாரிப்புக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது. அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்துவது, புதிய பேருந்து நிலையத்தை முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல், மோட்டார் உதிரிப் பாகங்கள் தொடர்பான தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, கோட்டை அகழியைத் தூர்வாரி சுற்றுலா தளமாக மாற்றுவது போன்ற கோரிக்கைகள் இருந்து வருகிறது.

மயிலம் தொகுதியில் உள்ள தமிழ் புலவர்கள் கல்லூரியை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்த வேண்டும். மயிலம் முருகர் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்,செஞ்சி ராஜா தேசிங்கு கோட்டை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுமையாக நடைபெறவில்லை, பணிகளை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

போளூரில் ரெயில்வே மேம்பாலப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போளூர் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஜவ்வாது மலையை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை போளூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.மேலும் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும், அரசு வேளாண்மை கல்லூரி, மகளிர் கல்லூரி கொண்டு வரவேண்டும் என்பது செய்யாறு பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

செய்யாறு சிப்காட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்
செய்யாறு சிப்காட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்

வெற்றி யாருக்கு?

தற்போது நடைபெறும் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும், இதில் தி.மு.க. சார்பில் களமிறங்கும் தரணிவேந்தனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டாலும், செய்யாறு சிப்காட் விவகாரம் வாக்கு சதவீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

தி.மு.க. அளவுக்கு சம பலம் கொண்ட அ.தி.மு.க. சார்பில் தூசி மோகன், செஞ்சி ஏழுமலை போன்ற நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் யாராவது அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அதைபோல், பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ்குமார் ஓரளவு அறியப்பட்டவராக இருந்தாலும், வந்தவாசி, பெரணமல்லூர் ஆகிய பகுதிகளிலிருந்து பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிகள் தி.மு.க. விற்கு வந்துவிட்தாலும், பா.ஜ.க.வினர் வாக்கு சேகரிப்பில் ஆர்வம் காட்டாததாலும் கணேஷ்குமார் வெற்றி பெறுவது கடினம் என்கிறனர் தொகுதி மக்கள்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com