தொடங்கியதும் முடங்கியது நாடாளுமன்றம்!

Lok sabha
மக்களவை
Published on

மக்களவையில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியவுடன், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்த நிலையில், டெல்லி முழுவதும் 163 தடைச் சட்டத்தை காவல்துறையினர் நேற்று மாலை அமலுக்கு கொண்டுவந்தனர்.

ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற சுற்றுப் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள், ஜந்தர் மந்தர் பகுதிகளை இணைக்கும் சாலைகள் ஆகியவற்றை காவல்துறையினர் மூடிவைத்துள்ளனர்.

இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு முதலில் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவில் நன்கொடைத் திருட்டு, மேகதாது அணை, நீட் வினாத்தாள் கசிவு, எத்தனால் பெட்ரோல் உட்பட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீசைக் கொடுத்திருந்தன. அதற்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசத் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவை செயல்பட ஒத்துழைக்குமாறு அவைத்தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியும், தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com