பாம்பன் மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் நலத் திட்ட உதவி
பாம்பன் மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் நலத் திட்ட உதவி

கச்சத்தீவைத் தாரைவார்த்தாரா கருணாநிதி? - முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம்

கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு என பாஜகவும் அதிமுகவும் கூறிவருவதை, உளறல் எனச் சாடியுள்ளார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இராமநாதபுரம் மீனவர் மாநாட்டில் இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல் முதலாக ஸ்டாலின் விரிவான விளக்கத்தை அளித்தார்.

” இங்கே இருக்கக்கூடிய சிலர், இதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள். 1971-ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியதுமே – அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி அவர்களுக்கு உத்தரவிட்டார். கச்சத்தீவானது, இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டார். அதை மீறித்தான் 1974 ஜூன் 26-ஆம் நாள் கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய – இலங்கை பிரதமர்களால் போடப்பட்டது.

இது ஒப்பந்தம்தானே தவிர சட்டம் அல்ல! நல்லா கவனியுங்கள், அப்படி எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதைத் திமுகவும் ஆதரிக்கவில்லை. உடனடியாக, டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சந்தித்தார். கச்சத்தீவை தரக்கூடாது என்று வலியுறுத்துனார்.

கச்சத்தீவு நமக்குச் சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார். அன்றைய சட்ட அமைச்சர் செ.மாதவன் அவர்களும் முதலமைச்சரோடு உடன் சென்றார். சென்னை திரும்பியதும் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் தலைவர் கலைஞர் கடிதம் எழுதினார்.

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்தான். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங், வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் ஆகியோரை சந்தித்து இந்த ஆதாரங்கள முதலமைச்சர் கலைஞர் கொடுத்திருக்கிறார்.

ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளே– அதாவது 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டினார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாகவேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான்.

அன்று முதல் இன்று வரை ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக செய்கிறார்கள். அது என்னவென்றால், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வது!

21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் தலைவர் கலைஞர். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நடத்தப்பட்டது.

*தஞ்சையில் கலைஞர், சென்னையில் பேராசிரியர், அப்போது திருப்பெரும்புதூரில் நான்தான் பேசினேன். இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக இந்தியாவோட ஒரு பகுதியை தாரை வார்த்தது என்று அடிப்படை அறிவும் இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையும் இல்லாமல், சிலர் பேசி வருவது வெட்கக்கேடானது! கண்டிக்கத்தக்கது. கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும். எனவே இந்திய அரசு, இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.” என்று ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com