ஆளுநர் ஆர்.என்.இரவி
ஆளுநர் ஆர்.என்.இரவி

நீட் ரத்து மசோதாவுக்கு எப்போதும் ஒப்புதல் தரமாட்டேன் - ஆளுநர் ரவி

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்துசெய்யக்கூடிய மசோதாவில் கையெழுத்திடவே மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.இரவி கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் ஆளுநர் மாளிகையில் ‘எண்ணித் துணிக’ எனும் உரையாடல் நிகழ்ச்சியை ஆளுநர் நடத்தினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சேலத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர், நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஆளுநர் இரவி, அப்படி அனுமதி அளிப்பதாக இருந்தால் கடைசி ஆளாகத்தான் நான் இருப்பேன் என்று முதலில் கூறியவர், ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டேன் என்றும் சொன்னார்.

கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் அந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஒருவேளை தனக்கு அதற்கான அதிகாரம் இருந்தாலும் தான் நீட் ரத்துக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்றும் இரவி அழுத்தமாகக் கூறினார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தால் மாணவர்களின் போட்டியிடும் திறனை இல்லாமல் செய்துவிடும் என்றும், சிபிஎஸ் இ பாடத்திட்டத்தைப் படித்து தேர்ச்சி பெறமுடியும் என்கிறபோது நீட் தேர்விலும் மாணவர்கள் வெல்ல முடியும்; வகுப்பு பாடத்தை நடத்தும்போதே நீட் தேர்வுக்கான தயாரிப்பையும் வழங்கலாம் என்றும் ஆளுநர் ரவி யோசனையையும் சொன்னார்.

அவரிடம் கேள்வி எழுப்பியவரை உரத்த குரலில் உட்காருமாறும் ஆளூநர் கூறியதும், அவரிடமிருந்த ஒலிவாங்கியை வாங்குவதற்காக இரண்டு பேர் விரைந்தனர். அடுத்த கேள்வியைக் கேட்டதும் அவரிடமிருந்து ஒலிவாங்கி வாங்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com