
தேர்தல் மேகம் மாநிலத்தைச் சூழ்ந்துவிட்டது. மழையாக அரசியல்வாதிகள் பொழிய ஆரம்பித்துள்ளனர். வாக்குறுதிகளும் வசைகளும் மாறிமாறி இனி ஒலிக்க ஆரம்பிக்கும்.
சமீபத்தில் இந்தத் தேர்தலுக்காக மதுராந்தகத்தில் கலந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளுடனான முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கினார்.
”திமுகவில் முன்னேற, ஒருவருக்கு நான்கு வழிகள் உள்ளன: வாரிசு வழி. ஊழல் வழி. பெண்களை அவமதித்தல். நமது கலாச்சாரத்தை சீரழித்தல்’ என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரம் வாரிசு அரசியல், ஊழல் ஆகிய இரண்டையும் முன்வைத்துத்தான் அமையும் என்பதை அவரது பேச்சு உறுதிப்படுத்தியது. தன் உரையில் இரண்டு திருக்குறள்களைப் பயன்படுத்திப் பேசிய எடப்பாடி பழனிசாமியின் உரையும்கூட இந்த பாணியில்தான் அமைந்திருந்தது. மொத்தமாக கூட்டணிக் கட்சிகள் எல்லோரும் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்; இதுதான் அவர்களின் கடைசித் தேர்தல் என்பதை முழக்கமாக வைக்கின்றனர்.
கடந்த தேர்தலில் பாஜகவையும் அதிமுகவையும் தமிழ்நாட்டின் எதிரிகளாக சித்திரித்து அடிமைகளுக்கா உங்கள் ஓட்டு என திமுகவின் பிரச்சாரம் அமைந்திருந்தது. இந்த தேர்தலில் அந்த உக்கிரமான பாஜக தாக்குதல் தொடருமா? தொடர்ந்தால் எந்த அளவுக்குப் பலன் இருக்கும் என்று தெரியவில்லை. திமுக தலைமை கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பலனனடைந்தவர்களின் நல்லெண்ணத்தை வாக்குகளாகப் பெறுவதில் கவனம் செலுத்தும் என்பதற்கான அறிகுறிகளே இப்போது தெரிகின்றன. பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அட்டைகளுக்கு 3000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு வெல்வோம் ஒன்றாக என பதாகைகள் வைக்கப்பட்டன. பின்னர் இந்த குரலே அனைத்து விளம்பரங்களிலும் முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதையில் ஒருவரையும் பின் தங்க விடமாட்டோம் என்ற உணர்ச்சிபூர்வமான உறுதிமொழியுடன் கூடிய அந்த விளம்பரங்களின் பின்னணி நேர்மறையாகவும் தேர்தலை அணுகுவோம் என்பதற்கான அறிகுறியே.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னர் இடம்பெற்றிருந்த தேமுதிக, புதிய தமிழகம் ஆகியவை சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது இடம்பெற்றிருக்கவில்லை. டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, எடப்பாடி பழனிசாமி உடனான பழைய பஞ்சாயத்துகளை மறந்து இடம் பெற்றது உண்மையில் ஒரு பாசிட்டிவ் பாயிண்ட்தான். 2021 தேர்தலில் அதிமுகவை பல தொகுதிகளில் பஞ்சராக்கி அழகு பார்த்ததற்கு இந்தத் தேர்தலில்தான் பலன் கிடைத்துள்ளது எனச் சொல்லலாம். ஆனால் பாமக- அப்பா மகன் என்று உடைந்திருக்கும் நிலையில் அது எம்மாதிரியான பலத்தை தேஜகூ-வுக்குக் கொடுக்கும் என்பது அறுதியிட்டுக் கூற இயலாத நிலை.
“எப்படியாவது நடிகர் விஜய் தலைமையிலான தவெகவை தே.ஜ.கூட்டணிக்குக் கொண்டுவரவேண்டும். அதன் மூலம் அதிமுகவின் பலத்தைக் கூட்டணிக்குள் குறைக்கவேண்டும் என பாஜக வியூகம் வகுப்பாளர்கள் திட்டமிட்டனர். ஆனால் தவெக அதற்கு இடம் கொடுக்கவில்லை,’’ என்று சொல்கிறார் அரசியல் விமர்சகர் பிரியன்.
அதிமுக தலைமையிலான தேஜகூட்டணி என்று சொன்னாலும் சரி… எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்னாலும் சரி… உள்ளே வெளிப்படையாகவே கூட்டணி ஆட்சி என்ற விஷயம் தீர்க்கப்படாமலே ஓடிக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் டிடிவி தினகரன் இதை ஒப்புக்கொண்டார்.
“ஆந்திராவிலும் மற்ற இடங்களிலும் பெரிய கட்சி ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை பலத்தைப் பெற்றாலும் கூட கூட்டணிக்கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கிறார்கள். அதை தேஜகூ பார்முலாவாக வைத்திருக்கிறார்கள். அதிமுக அதற்கு விரும்பவில்லைதான்… தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்... எந்தக் கட்சிதான் அதிகாரத்தில் பங்குகொள்ள விரும்பாது?’ எனக் கூறினார்.
இதே பிரச்னையால்தான் திமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாமல் நிற்கிறது. காங்கிரஸ் தலைமையில் இருந்து ஆட்சியில் பங்கு தருவதாக வாக்குறுதி கேட்கப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. இதை அடுத்துதான் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கம்பு சுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவெக பக்கம் போய்விடும் சாத்தியங்களையும் இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நாள்வரை வைத்துள்ளனர். ஆனால் திமுக தலைமையிலிருந்து,’நீங்கள் கூட்டணியில் இருந்து விலகினாலும் ஒன்றும் பாதகமில்லை. ஒரு வேளை தோற்றால் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் தயார்..’ என்கிற ரீதியில் பதில் சொல்லப்பட்டதாக ஒரு தகவல் உலவுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட இடங்களே இந்த தேர்தலிலும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஊசலாட்டத்தில் இருக்கும் கட்சிகளுடனான பேரங்களும் நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுகள் தெரிந்துவிடும்.
“தவெக மாநிலத்தின் தெற்கு, மேற்கு பகுதிகளில் அதிமுகவின் வாக்குகளிலும் வடக்கு பகுதியில் திமுகவின் வாக்குகளிலும் சேதாரத்தை விளைவிக்கக் கூடும். அக்கட்சியைச் சேர்ந்த யாரும் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ பலர் வெற்றி பெறுவதைக் குலைப்பார்கள் என்பதுதான் இப்போதைய அரசியல் கணிப்பாக இருக்கிறது. அவர் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் தேஜ கூட்டணிக்குப் போகாமல் தனக்கு வருமாறு செய்துவிட்டால் திமுக கூட்டணிக்கு சாதகம். அதே சமயம் சிறுபான்மை வாக்குகளை அவர் பெற்றுவிட்டால் திமுகவுக்குப் பாதகமாக அமையும். விஜய் இத்தேர்தலில் மிகப்பெரிய சீர்குலைப்பாளராக இருப்பார்!. இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியும்சரி அதிமுக கூட்டணியும் சரி; ஆட்சிக்கான தனிப்பெரும்பான்மை பெறுவதைப் பற்றி ஒரு நம்பிக்கைக்கு வர இயலாது… எனவே இந்த கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளுக்கு மேலும் வலு பிறக்கிறது. உண்மையில் தன்னுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு என கொளுத்திப் போட்டவரே விஜய்தான். அவருடன் யாரும் போகவில்லை என்பது வேறு விசயம்… அவர் தன் வேலையைச் சிறப்பாக செய்துவிட்டார்!” என்று சொல்கிறார் ப்ரியன்.
“அதிகாரத்தை பிற கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ளும் நிலை இதுவரைக்கும் தமிழ்நாட்டில் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ வந்தது இல்லை. ஆனால் டெல்லியில் கூட்டணி அரசில் அதிகாரத்தை கட்சிகள் பகிர்ந்துகொள்வதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஒன்று இங்கும் ஏற்பட்டால் அதற்காக யாரும் ஆச்சரியப்படப் போவதில்லை’’ எனச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராவ்.
அதிமுக அணி வெற்றி பெற்றால் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜகவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துதான் ஆகவேண்டி இருக்கும். மாட்டோம் எனச் சொல்லவேண்டுமானால் மிகப்பெரிய எண்ணிக்கையில் வெல்லவேண்டும். நிதிப்பகிர்வு நல்ல முறையில் கிடைக்க வேண்டுமானால் அவர்களை அனுசரித்துப் போகவேண்டும் என்று நினைக்கக் கூடும்.
ஏற்கெனவே தமிழக அரசியலில் இரட்டைக் குழல் துப்பாக்கி என்ற சொல்லாடல் பழக்கமான ஒன்று. இந்த இரட்டை எஞ்சின் என்பது புதியது. எதற்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் எனப் பார்ப்போம்.