அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

மாநில சுயாட்சி கேட்கும் தி.மு.க., கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதிப்பதா?- அன்புமணி சாடல்

நெய்வேலி சுரங்க விரிவாக்கத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர கடலூர் மாவட்டத்தின் பல கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் தடைவிதித்துவிட்டனர் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திர நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்வேலி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

ஆனால், கத்தாழை, கரிவெட்டி, வீரமுடையாநத்தம் உள்பட்ட பல இடங்களில், மூன்றாவது சுரங்கத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்தனர் என்றும்,
”பல இடங்களில் காவல்துறையினரைக்  கொண்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து  விட்டுள்ளனர்; தங்களின் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்கள் குறித்து மக்கள் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயல்.” என்றும் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்; அதை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது; ஆனால், அதே தன்னாட்சி அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க மறுப்பதும், உரிமைக்காக குரல் கொடுக்கும் பொதுமக்களுக்கு எதிராக காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும் எந்த வகையில் நியாயம் என்றும் அன்புமணி கேட்டுள்ளார்.


” கடலூர் மாவட்டத்தில் தடைவிதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த அரசு ஆணையிட வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்த  அரசு ஆணையிடுவதுடன், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றும் பா.ம.க. தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com